அதிமுகவில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்த சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.மாணிக்கம் மீண்டும் அதிமுகவில் சேர்ந்துள்ளார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மாணிக்கம் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.
2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் மாணிக்கம். அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்கு ஆதரவுக் குரல் கொடுத்த முதல் எம்.எல்.ஏ சோழவந்தான் மாணிக்கம். அதிமுகவில் இரு அணிகளும் இணைந்த பின்னர் அதிமுகவின் வழிகாட்டு குழுவிலும் உறுப்பினராக பதவி வகித்தார். மதுரை மேற்கு மாவட்ட துணைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இவர் ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருக்கமாக இருந்து வந்த நிலையில் 2021 சட்டசபை தேர்தலில் சோழவந்தான் தொகுதியை ஓ.பி.எஸ் போராடி மாணிக்கத்துக்கே மீண்டும் பெற்றுத் தந்தார். எனினும் சட்டசபைத் தேர்தலில் மாணிக்கம் தோல்வியைத் தழுவினார்.
இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் மாணிக்கம். பாஜகவில் கூட்டுறவு பிரிவு மாநில தலைவராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தற்போது பாஜகவில் இருந்து விலகி மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
