குஜராத் மண்ணில் எங்களுக்கு நீதி கிடைக்காது: கே.எஸ். அழகிரி

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், இந்த தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்பு காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்து உள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறியதாவது:-

இது நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். குஜராத் மண்ணில் எங்களுக்கு நீதி கிடைக்காது. ஆனாலும் சட்ட பிரகாரங்கள்படி ஒவ்வொரு நீதிமன்றமாக சென்றுதான் உச்ச நீதிமன்றம் செல்ல முடியும். உச்ச நீதிமன்றத்தில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம். சட்ட ரீதியாக நாங்கள் போராடுவோம். மக்கள் மன்றத்திலும் போராடுவோம்.

ராகுல் காந்தியை முடக்கி விடலாம் என இவர்கள் நினைக்கிறார்கள். அது முடியாது. ராகுல் காந்தியை ஒருகாலத்திலும் முடக்க முடியாது. மகாத்மா காந்தியை போல லட்சிய வீரர். கொள்கைக்காக நிற்க கூடியவர். எதன் பொருட்டும் பின்வாங்காதவர். அவருக்கு பின்னால் கோடிக்கணக்கான தோழர்கள். நண்பர்கள் இருக்கிறார்கள். இதை நாங்கள் எதிர்கொள்வோம். எங்கள் பக்கம் என்ன நியாயமான காரணம் உள்ளதோ அதை உச்ச நீதிமன்றத்தில் எடுத்து செல்வோம். இந்தியாவில் குற்றம் சாட்டபட்ட ஒருவர் உச்ச நீதிமன்றம் வரை சென்று தனக்கான நீதியை பெறமுடியும். அப்படி பெற்றும் இருக்கிறார்கள். கீழ் கோர்ட்களில் கொடுத்த தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடியும் செய்து இருக்கிறது. எனவே உச்ச நீதிமன்றம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.