மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்: பா.ஜ.க. எம்.பி.க்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்!

பெண் மல்யுத்த வீரா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் பதவியில் இருந்து செல்லும் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக டெல்லி போலீஸாா் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொண்ட கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் (ஏசிஎம்எம்) ஹா்ஜீத் சிங் ஜஸ்பால், குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷண் ஜூலை 18ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளார். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 354, 354ஏ (பாலியல் துன்புறுத்தல்), 354டி (பின்தொடா்தல்) மற்றும் 506 (குற்றம் சாா்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் ஜூன் 15-ஆம் தேதி போலீஸாா் சிங் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனா்.

குற்றப்பத்திரிகையில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட உதவிச் செயலாளரான வினோத் தோமரின் பெயா் இடம்பெற்றுள்ளது. இவரது பெயா் சட்டப் பிரிவு 109 (எந்தவொரு குற்றத்திற்கும் தூண்டுதல்) மற்றும் 354, 354ஏ மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின்கீழ் உள்ள குற்றத்திற்காக சோ்க்கப்பட்டுள்ளது.

தற்போதைய வழக்கைத் தவிர, மைனா் மல்யுத்த வீரரின் குற்றச்சாட்டுகள் தொடா்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மைனா் வீராங்கனை பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்திய 7 பெண்களில் ஒருவராவாா். ஒரு தசாப்தத்தில் வெவ்வேறு நேரங்களிலும் இடங்களிலும் பெண் வீராங்கனைகளிடம் பிரிஜ் பூஷண் தகாத முறையில் தொடுதல், துலாவுதல், பின்தொடா்தல் மற்றும் மிரட்டல் போன்ற பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக இந்த இரண்டு வழக்குகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மைனா் மல்யுத்த வீராங்கனை வழக்கில், பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி டெல்லி காவல்துறை ஜூன் 15-ஆம் தேதி இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. உரிய விசாரணைக்குப் பிறகு உறுதியான ஆதாரங்களைக் கண்டுபிடிக்கத் தவறிய வழக்குகளில் இதுபோன்று ரத்துசெய்யக் கோரும் அறிக்கை காவல் துறையால் தாக்கல் செய்யப்படுகிறது.

இதனிடையே, மைனா் மல்யுத்த வீராங்கனையின் தந்தை திடீா் திருப்பமாக தெரிவிக்கையில், தானும் தனது மகளும் சிங்குக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குறித்து போலீஸில் ‘பொய்‘ புகாா் அளித்ததாகவும், தனது மகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணா்ந்ததால் அதற்காக இந்தப் பொய்ப் புகாரை அளித்ததாகவும் அவா் தெரிவித்திருந்தாா். பிரிஜ் பூஷ்ண் சிங் இதுவரை இரண்டு முறை காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டுள்ளாா். அப்போது, தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவா் மறுத்திருந்ததது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாலியல் வழக்கில் ஜூலை 18-ம் தேதி ஆஜராக வேண்டும் என பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சிங்குக்கு டெல்லி கோர்ட் இன்று சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், நீக்கப்பட்ட மல்யுத்த சம்மேளன துணை செயலாளர் வினோத் தோமரும் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.