ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தில் முக்கிய நடவடிக்கை தொடர்பாக 3 ரயில்வே ஊழியர்களை சிபிஐ கைது செய்துள்ளனர்.
ஒடிசாவில் கடந்த மாதம் மிக மோசமான ரயில் விபத்து ஏற்பட்டது. கடந்த ஜூன் 2ஆம் தேதி கொல்கத்தா- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியது. இப்படி 3 ரயில்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதே இதை மோசமானதாக மாற்றியுள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த மோசமான ரயில் விபத்தில் சுமார் 293 பேர் உயிரிழந்தனர், 1000 மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்து நடந்து ஒரு மாதம் ஆகும் நிலையில், முதலில் விபத்திற்கான காரணம் எனப் பல தகவல்கள் வெளியானது. ரயில் விபத்து நடந்த போது சிக்னல் ஹேக் செய்யப்பட்டு சதி செய்யப்பட்டிருக்கலாம் என்று எல்லாம் கூறப்பட்டிருந்தது. இதற்கிடையே வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக இந்திய ரயில்வேயின் மூன்று ஊழியர்களை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே துறையில் பணியாற்றும் அருண் குமார் மஹந்தா, எம்.டி அமீர் கான் மற்றும் பப்பு குமார் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில் அருண் குமார் மஹந்தா சிக்னல் பிரிவில் மூத்த பிரிவு பொறியாளராக உள்ளார். முகமது அமீர் கான் செக்ஷன் பொறியாளராக இருக்கிறார். அதேபோல பப்பு குமார் டெக்னிஷனாக இருக்கிறார். தங்கள் செயல்பாடுகளால் விபத்து ஏற்படலாம் எனத் தெரிந்தும் இவர்கள் அதுபோல நடந்துள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. மேலும், ஆதாரங்களை அழித்ததாகவும் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த மூவரின் செயல்பாடுகளே விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. கொலை வழக்கில் இல்லாமல் culpable homicide என்ற பிரிவில் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவர்களுக்கு நோக்கம் இருந்தால் அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ வழக்கு விசாரணை ஒரு பக்கம் நடந்து வந்தாலும், மறுபுறம் ரயில்வே பாதுகாப்பு ஆணையம் விசாரணையும் நடந்து வருகிறது. கடந்த வாரம் தான் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அறிக்கை குறித்த தகவல்கள் வெளியாகியிருந்தது. அதில் சிக்னல் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களின் தவறே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டிருந்தது. நாச வேலை அல்லது தொழில்நுட்பக் கோளாறு அல்லது இயந்திரக் கோளாறு உள்ளிட்ட காரணங்களை அவர் நிராகரித்திருந்தார்.
இந்த நூற்றாண்டில் நடந்த மோசமான ரயில் விபத்தாக இது பார்க்கப்படுகிறது. பாலசோர் மாவட்டத்தில் வந்து கொண்டிருந்த போது கோரமண்டல் ரயிலுக்கு முதலில் பச்சை சிக்னல் கொடுத்து உடனடியாக ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அது மெயின் லைனை விட்டுவிட்டு லூப் லைனில் சென்ற நிலையில், அங்கிருந்த சரக்கு ரயிலில் அது மோதியுள்ளது. இதனால் கோரமண்டல் ரயிலில் 10 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. அதன் பிறகு சில நிமிடங்களிலேயே அதே வழித்தடத்தில் வந்த யஸ்வந்த்பூர்-ஹவுரா ரயிலும் அதில் மோதியுள்ளது. இந்த விபத்தில் 293 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 1000 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.