மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று துணை ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியுள்ள நிலையில் சில நிமிடங்களிலேயே வன்முறை வெடித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஜூலை 8 ஆம் தேதி நடைபெறும் என்று கடந்த மாதம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் வெடித்தன. ஆங்காங்கே அரசியல் கட்சியினர் மோதிக்கொண்டனர். இதில் 12 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதில் 12 வயது சிறுவனும் அடக்கம். தொடர் வன்முறை சம்பவங்கள் காரணமாக மேற்கு வங்கத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் சூடிபிடித்து இருக்கிறது. ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிகள் இடையே போட்டி நிலவி வருகிறது.
இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளார்கள். தேர்தலை முன்னிட்டு வன்முறைகள் அங்கு தொடர் கதையாகி வருகின்றன. நள்ளிரவில் கூட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் வன்முறை ஏற்பட்டு இருக்கிறது. அதில் காங்கிரஸ் தொண்டர் அர்விந்தோ மொண்டல் கொல்லப்பட்டார். அரவிந்தோ மொண்டல் வீடும் கடுமையாக தாக்கப்பட்டு உள்ளது. அவரது கொலையைத் தொடர்ந்து இரு கட்சியினருக்கும் இடையே வன்முறை பூதாகரமானது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டார்கள். அதே நேரம் அரவிந்தோ மொண்டலை தாங்கள் கொல்லவில்லை என திரிணாமூல் கட்சியினர் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் இன்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. 65,000 துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படு இருக்கிறார்கள். அதேபோல் மாநில காவல்துறை சார்பில் 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார்கள். வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே கூச்பெகார் மாவட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.