பெங்களூரு ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்து கொள்ளக்கூடாது: டாக்டர் கிருஷ்ணசாமி

பெங்களூருவில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ளக்கூடாது என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். சட்ட விரோதமாக உள்ள பார்கள் மற்றும் சந்து, பொந்துகளில் மது விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வோம், பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம், உழைக்கும் மகளிர் அனைவருக்கும் ரூ. 1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால் 2½ வருடங்கள் முடிந்த பின்னரும் இன்னமும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இது அவர்களது பாராளுமன்ற தேர்தல் வாக்கு வங்கியை பாதிக்கும். ஓட்டு வாங்கும் போது ஒரு கோரிக்கையை கொடுத்து விட்டு தற்போது அதற்கு நேர்மாறாக செயல்பட்டு வருகின்றனர்.

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதனை தடுக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். பெங்களூருவில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளக்கூடாது. அவர் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அந்த ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.