மாசம் ரூ 1000 வாங்கணும்னா பிச்சைக்காரியா இருக்க வேண்டும்: சீமான்

மாதம் ரூ 1000 வாங்கணும்னா பிச்சைக்காரியா இருக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மகளிருக்கு ரூ 1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த தொகை யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது குறித்து சில நெறிமுறைகளை அரசு வகுத்து அதை வெளியிட்டிருந்தது.

அதில் குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் என பெயரிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாக கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால் அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்படுவார். திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் தலைமையிலான குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்படுவர். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் இந்தத் திட்டத்தின் கீள் பயன்பெற ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ 2.5 லட்சத்திற்கு கீழே உள்ள குடும்பங்களாக இருத்தல் வேண்டும். 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கும் குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்களாக இருக்க வேண்டும். ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட் மின்சாரத்தை விட குறைவாக பயன்படுத்தும் குடும்பங்களாக இருத்தல் வேண்டும். சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர் , லாரி உள்ளிட்ட வாகனங்களை வைத்திருக்காதவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என அந்த நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.

தேர்தல் அறிக்கையில் எந்த நிபந்தனையையும் சொல்லாமல் ரூ 1000 உரிமைத் தொகை என கூறிவிட்டு தற்போது விதிகளை வகுப்பது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மகளிருக்கு 1000 ரூபாய் என இவர்கள் அறிவித்துவிட்டு இப்போது கண்டிஷன் போடுகிறார்கள். எந்த குடும்பத் தலைவியாவது இவர்களிடம் எங்களுக்கு மாதம் ரூ 1000 கொடுங்கள் என கேட்டனரா, இவர்களாகவே அறிவித்துவிட்டு இப்போது நிலம் இருக்கக் கூடாது, வீடு இருக்கக் கூடாது என்றால் என்ன அர்த்தம். இதெல்லாம் இருந்தால் நாங்கள் ஏன் ரூ 1000 கேட்க போகிறோம். இதெல்லாம் அந்த மக்களை அவமானப்படுத்தும் செயல். இவர்கள் கொடுக்கும் ரூ 1000 உதவித்தொகையை பெற பிச்சைக்காரியா இருக்கணும் போல!

நகைக் கடன் தள்ளுபடியையும் இப்படிதான் அனைவருக்கும் என அறிவித்துவிட்டு திடீரென அதற்கும் ஒரு ரூல்ஸ் போட்டார்கள். கேட்டால் நகைப் பெட்டியை கொடுத்துவிட்டு பலர் கடன் வாங்கியதாக சொல்கிறார்கள். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. நகை பெட்டியை கொடுத்து கடன் வாங்கினார்கள் என்றால் அந்த பெட்டியில் நகை இருக்கிறதா இல்லையா என வங்கி மேலாளர் பார்த்திருக்க வேண்டாமா. அப்போது இருந்த வங்கி மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா. டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமையே காரணம். காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க வேண்டும். ஊதியத்தை பிடிக்காமல் விடுமுறை அறிவிக்க வேண்டும். தண்டமா சமாதி கட்டுற காச மிச்சம் செய்தாலே சாதிக்க முடியும். இவ்வாறு சீமான் விமர்சித்துள்ளார்.