கொரோனா தொற்று பரவலுக்கு முன்பிருந்து கடந்த மார்ச் 31 வரை, கங்கை ஆற்றில் எத்தனை பிணங்கள் வீசி எறியப்பட்டன; எத்தனை பிணங்கள் கங்கை ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டன என்ற தகவலை அளிக்குமாறு, உத்தர பிரதேசம் மற்றும் பீகார் அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது, உ.பி., மற்றும் பீகாரில் உள்ள கங்கை ஆற்றில் நுாற்றுக்கணக்கான பிணங்கள் மிதந்தன. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பிணங்கள் ஆற்றில் வீசி எறியப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முறையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டது என்பதை உறுதி செய்யக் கோரி, பத்திரிகையாளர்சஞ்சய் சர்மா என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:-
கொரோனா தொற்று பரவல் ஏற்படுவதற்கு முந்தைய 2018 – 19ம் ஆண்டு மற்றும் தொற்று பரவல் ஏற்பட்ட 2020 – 21 துவங்கி, 2022 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில், கங்கை ஆற்றில் எத்தனை பிணங்கள் வீசி எறியப்பட்டு மிதந்து வந்தது கண்டறியப்பட்டன. உ.பி., மற்றும் பீகாரில் உள்ள கங்கை ஆற்றங்கரையில் எத்தனை பிணங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் எத்தனை இறுதிச் சடங்குகளுக்கு அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. கங்கை ஆற்றில் பிணங்களை வீசி எறிவதையும், ஆற்றங்கரையில் உடல்களை புதைப்பதையும் தடுக்க, மாநில அரசுகள் சார்பில் என்ன விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்துவதில் விதிமுறைகள் மீறப்பட்டது தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டு, விசாரணை நடைபெறுகின்றனவா. சுற்றுச்சூழல் நெறிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டிருந்தால், மறுசீரமைப்பு செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்களை சமர்ப்பிக்கவும். மேற்குறிப்பிட்ட விபரங்கள் அனைத்தையும் உ.பி., மற்றும் பீகார் அரசுகள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.