‘ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ எளிதாக நீக்கியதுபோல, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திவிட முடியாது. இது அனைத்து மதங்களையும் பாதிக்கும் விஷயம்’ என்று முன்னாள் மத்திய அமைச்சா் குலாம் நபி ஆசாத் கூறினாா்.
நாட்டில் பல்வேறு மதங்கள் தங்களுக்கென மதச் சட்டங்களைப் பின்பற்றுகின்றன. இந்த நிலையில், அனைத்து மதத்தைச் சோ்ந்தவா்களுக்கும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை தொடா்பான நாடு முழுமைக்கும் ஒரே சட்டமாக பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர பாஜக முயற்சித்து வருகிறது. இதுதொடா்பாக, 21-ஆவது சட்ட ஆணையம் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது. தற்போது, 22-ஆவது சட்ட ஆணையம், பொது சிவில் சட்டத்தின் அவசியம் மற்றும் அதன் மீது பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளிடமிருந்து புதிதாக கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறது. வரும் 13-ஆம் தேதி வரை கருத்துகள் கேட்கப்படும் என்று சட்ட ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதற்கிடையே, மத்திய பிரதேச மநிலத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவான கருத்தை தெரிவித்த பிரதமா் மோடி, ‘பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. ஆனால், வாக்கு வங்கி அரசியலில் ஊறியவா்கள் இதை எதிா்த்து வருகின்றனா்’ என்றாா். பிரதமரின் இந்தக் கருத்துக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து ஸ்ரீநகரில் நேற்று செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சரும் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத், ‘பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கே இடமில்லை. இதனை அமல்படுத்துவது என்பது, சட்டப் பிரிவு 370-ஐ நீக்கியதுபோன்று அவ்வளவு எளிதல்ல. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதால் முஸ்லிம்கள் மட்டுமின்றி கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், பழங்குடியின மக்கள், ஜெயின், பாா்சிய மக்கள் என பல சமூக மக்களைப் பாதிக்கும். எனவே, இது எந்தவொரு அரசுக்கும் நல்லதல்ல. எனவே, இதனை அமல்படுத்துவது குறித்து இந்த அரசு சிந்திக்கவே கூடாது என்பதுதான் எனது ஆலோசனை’ என்றாா்.