தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பாக ஏராளமான மீன்பிடி படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே அவர்கள் முகாமிட்டு மீன்பிடித்துக் கொண்டு இருந்த நிலையில் அவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து எல்லை தாண்டி மீன்பிடித்து கொண்டு இருந்ததாக கூறி கைது செய்து உள்ளார்கள். 13 மீனவர்களையும் 2 படகுகளையும் கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர் அவர்களை காங்கேசந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருக்கிறார்கள். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதால் ராமேஸ்வரத்தில் அவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் துயரம் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை தாக்கி அவர்களின் படகுகளை உடைத்து வலைகளை அறுத்து அட்டூழியம் செய்து வருகிறார்கள் இலங்கை கடற்படையினர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என மீனவர்கள் பல முறை கோரிக்கை வைத்தும் பயனில்லை. மத்திய மாநில அரசுகள் தரப்பிலும் இலங்கை அரசிடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் அதற்கு செவி மடுக்கவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி இருக்கிறார்.