மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு ஆசை இருக்கலாம், உரிமை இல்லை: துரைமுருகன்

மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு ஆசை இருக்கலாம், ஆனால் உரிமையில்லை. அரசியல் ரீதியாக அவர்கள் கட்டியே தீருவோம் என்பார்கள், ஆனால் அது நடக்காது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தைச் சந்தித்து மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.

கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகதாது அணை திட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது, மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்துப் பேசினார். அப்போது, காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி தரக்கூடாது. காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லையென்றால் டெல்டாவில் உள்ள பயிர்கள் எல்லாம் காய்ந்து போய்விடும், எனவே தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதத்திற்கான நீரை கர்நாடகா விரைந்து திறந்து விட அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு ஆசை இருக்கலாம், ஆனால் கட்டுவதற்கு உரிமையில்லை. மேகதாது அணை கட்டக்கூடாது என்று சொல்ல நமக்கு உரிமை உள்ளது. காரணம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் நோ மேன்ஸ் ஏரியா உள்ளது. அதாவது கபிணிக்கு கீழே தண்ணீர் வழியும் இடம், அங்கிருந்து 80 டிஎம்சி தண்ணீர் நமக்கு வருகிறது. அங்கு அணை கட்ட அவர்களால் முடியாது. அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவேண்டும், மாசு கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை அனுமதி வழங்க வேண்டும். பல விஷயங்கள் இருக்கின்றன. அரசியல் களத்தில் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்பார்கள். நாங்கள் கட்டவே விட மாட்டோம் என்போம். எக்காலத்திலும் மேகதாது அணையை கட்ட விட மாட்டோம் என துரைமுருகன் உறுதி என செய்தி போடுவீர்கள். அவ்வளவுதான். இவ்வாறு அவர் கூறினார்.