திமுக ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டாலும் பரவாயில்லை என முதல்வர் ஸ்டாலின் பேசியதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை அக்கட்சியின் எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “மத்தியில் மோசமான சர்வாதிகார ஆட்சியை பாஜக நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த சர்வாதிகார பாசிச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் வந்துள்ளன. பாஜகவை எதிர்ப்பதால் திமுக ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என ஸ்டாலின் பேசினார்.
இதனிடையே, ஸ்டாலினின் இந்தப் பேச்சை பாஜகவினரும், அதிமுகவினரும் விமர்சித்து வருகின்றனர். ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், இதுதொடர்பாக திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “திமுக ஆட்சியை கலைப்பதற்கான சட்டப்பூர்வமாக எந்தக் காரணமும் மத்திய அரசிடம் இப்போது இல்லை. அதுமட்டுமல்லாமல், ஒரு மாநில அரசை மத்திய அரசு இஷ்டத்துக்கு கலைக்க முடியாதபடி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், பாஜகவினர் கொல்லைப்புறமாக வந்த ஆட்சியை பிடிக்கக்கூடியவர்கள். கர்நாடகா, மத்திய பிரதேசம், கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்காமல், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை பிடிக்கக்கூடிய கட்சி பாஜக. ஆட்சியை கைப்பற்றுவதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் பாஜக செல்லும். அதனை மனதில் வைத்தே முதல்வர் ஸ்டாலின் அவ்வாறு பேசினார்” என டிகேஎஸ். இளங்கோவன் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நிருபர் ஒருவர், “அப்படியென்றால் திமுக எல்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கிவிடும் எனக் கூற வருகிறீர்களா? விலைபோகும் அளவுக்குதான் திமுக எம்எல்ஏக்கள் இருக்கிறார்களா?” எனக் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்தஇளங்கோவன், “அப்படி கிடையாது. திமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முடியாது என்பது தெரிந்துதான், வேறு ஏதாவது வகையில் ஆட்சியை கலைப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது” என்றார்.