உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்துபோக செய்யும் வகையில் டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் தொடர்பாக மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதனை எதிர்த்து ஆம்ஆத்மி அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அதிரடியாக நோட்டீஸ் வழங்கி உள்ளது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். டெல்லியை பொறுத்தமட்டில் குடிமை பணிகள் அதிகாரிகள் நியமனம் என்பது டெல்லி அரசிடம் இல்லாமல் இருந்தது. மாறாக மத்திய அரசின் சார்பில் நியமனம் செய்யப்படும் லெப்டினென்ட் ஆளுநர் கையில் தான் குடிமை பணிகள் அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் செய்யும் அதிகாரம் இருந்தது. இப்போது டெல்லியில் ஆளும் ஆம்ஆத்மி அரசுக்கும், ஆளுநராக இருக்கும் வினய் குமார் சக்சேனாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
முன்னதாக குடிமை பணி அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பான அதிகாரம் என்பது டெல்லி அரசுக்கு தான் உள்ளது. இதில் ஆளுநர் மூலம் மத்திய அரசு தலையிட முடியாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கில் கடந்த மே மாதம் 11ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகள் நியமனத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என அதிரடியாக உத்தரவிட்டது. இதில் ஆளுநருக்கு உரிமை உள்ளதாக மத்திய அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. இது மத்திய அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் டெல்லி உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போகும் வகையில் மத்திய அரசு அவசர சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. இது வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கு ஆம்ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த சட்ட திருத்தத்துக்கு கட்சிகள் ஆதரவு வழங்க கூடாது என அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து கோரிக்கை வைத்து வருகிறார்.
இந்நிலையில் தான் மத்திய அரசின் இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து டெல்லியை ஆளும் ஆம்ஆத்மி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதுதொடர்பான மனுவில், ‛‛மத்திய அரசின் இந்த செயல்பாடு என்பது அரசியலமைப்புக்கு எதிரானது. மேலும் முந்தைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் வகையில் உள்ளது. இதனால் இந்த சட்ட திருத்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும்” என ஆம்ஆத்மி அரசு தெரிவித்து இருந்தது. இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க கோரி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.