அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோர் நேரில் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் மட்டுமே உறுப்பினராக கருதப்படுவர்: எடப்பாடி

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் மட்டுமே கட்சியின் உறுப்பினர்களாக கருதப்படுவர் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கட்சியின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் கட்சியில் சேருவதாக இருந்தால், அத்தகையவர்கள் கட்சியின் பொதுச் செயலாளருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து, மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டவர்களும், கட்சியின் பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கி மீண்டும் கட்சியில் சேருபவர்களும் மட்டுமே கட்சி உறுப்பினர்களாக கருதப்படுவர்.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காலந்தொட்டு இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆகவே, கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேருவதாக இருந்தால், மேற்கண்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தாக்கல் செய்திருந்த ஆவணங்கள் அனைத்தையும் தேர்தல் கமிஷன் இப்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்றும், துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. வழக்கறிஞரான முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை கூறுகையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.தான் உண்மையான அ.தி.மு.க. என்று நீண்ட நெடிய சட்ட போராட்டம் நடத்தினோம். கட்சியின் பொதுக்குழு தான் உயர்ந்த அதிகாரம் கொண்டது. அந்த வகையில் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு தான் உள்ளது. அவர் பொதுச்செயலாளராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தேர்தல் கமிஷனில் ஆவணங்களை சமர்ப்பித்திருந்தோம். இதில் எங்களுக்கு அடுத்தடுத்து வெற்றி கிடைத்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் கமிஷன் இப்போது தனது இணையதளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளது. இதன் மூலம் சட்டம் ஜெயித்துள்ளது. நீதி நியாயம்தான் வென்றுள்ளது என்பது நிரூபணமாகி உள்ளது. இவ்வாறு இன்பதுரை கூறினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக ஏற்றுக்கொண்டது ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.