டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தும் நிலையில் பகல் 12 மணிக்கு முன்கூட்டியே கடைகளைத் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக அமைச்சர் முத்துசாமி கூறியிருப்பதற்கு திமுகவின் கூட்டணி கட்சியான மதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மதிமுக நிர்வாகக் குழுவில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
* பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை திறந்த வெளிமாநாடாக செப்டம்பர்-15,2023 அன்று மதுரை மாநகரில் சிறப்பாகக் கொண்டாடுவது என்று கழக நிர்வாகக்குழுத் தீர்மானிக்கிறது.
* அரசியலமைப்பு சட்டத்தின் 154 ,163 ,164 ஆகிய பிரிவுகளின் கீழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தனக்கு அதிகாரம் இருப்பதாக ஆளுநர் ஆர். என். ரவி கருதிக் கொண்டிருக்கிறார். ஆளுநர் குறிப்பிட்டு இருக்கிற சட்டப்பிரிவுகளின் கீழ் வானளாவிய அதிகாரம் எதுவும் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. அரசியல் சட்டப் பிரிவு 154 இன் படி மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தாலும் , 154(2- ஆ)பிரிவு, மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் அதன் சட்டம் இயற்றும் அதிகார அமைப்பான மாநில சட்டமன்றத்திற்கு உட்பட்டு தான் இருக்கும் என்று தெளிவாக கூறுகிறது. அதைப்போல சட்டப்பிரிவு 163, ஆளுநர் தமது பணிகளை நிறைவேற்றும் போது ஒரு சில விதிவிலக்குகள் தவிர அனைத்திலும் அமைச்சரவையின் உதவியுடனும் ஆலோசனையுடன்தான் செயல்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறது. அரசியலமைப்பு சட்ட நெறிமுறைகளையும் மரபுகளையும் தொடர்ந்து மீறிவரும் ஆர். என்.ரவி, தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார்.
தமிழ்நாட்டில் அரசியல் குழப்பம் விளைவிக்க முனைந்து வரும் தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதனை வலியுறுத்தியே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் குடியரசு தலைவருக்கு ஆளுநரை திரும்ப பெற கையெழுத்து இயக்கத்தை ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி மக்கள் இயக்கமாக நடத்தி வருகிறது. ஆளுநருக்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் பேராதரவை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கோடிக்கு மேலான கையெழுத்துக்களைப் பெற்று, அவற்றை குடியரசு தலைவரிடம் ஒப்படைக்கும் கடமையை மறுமலர்ச்சி திமுக சார்பில் நிறைவேற்ற கையெழுத்து இயக்கத்தை விரைவு படுத்த கழக நிர்வாக குழு கேட்டுக் கொள்கிறது.
* கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா ஜூலை-7 ஆம் தேதி சட்டமன்றத்தில் வரவு- செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்த போது, “மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசிடம் தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும். முதல் திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற ஒன்றிய அரசிடம் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அணைக்கு நிலம் கையகப்படுத்துவதே அரசின் முதன்மை பணி என்றும் கூறியுள்ளார். மேலும் மேகதாது அணைக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும்” என்றும் அறிவித்துள்ளார். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம்,16.02.2018 இல் வழங்கிய தீர்ப்பிலும் காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கர்நாடக மாநிலத்திற்கு எந்த உரிமையும் இல்லை. தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறாமல் எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என்று தெளிவுபடுத்தப் பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறக்கப்பட வேண்டும். ஆனால், 2.83 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான 6.357 டிஎம்சி தண்ணீரை இன்னும் கர்நாடகா தரவேண்டியுள்ளது. காவிரியிலிருந்து ஜூலையில் 31.24 டிஎம்சியும், ஆகஸ்டில் 45.95 டிஎம்சியும் கர்நாடகா தர வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களுக்கான தண்ணீரை பெற்றுத்தந்தால் மட்டுமே குறுவை சாகுபடி செய்யமுடியும் என்று காவிரிப் படுகை விவசாயிகள் கவலையுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மேகேதாட்டு அணை கட்டப்படுமானால், காவிரிப் படுகைப் பகுதிகள் பாலைவனம் ஆகி விடும்.எனவே ஒன்றிய அரசு மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கக் கூடாது. தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை விரைவுப் படுத்தி, கர்நாடகா மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று மதிமுக நிர்வாகக் குழு வலியுறுத்துகிறது.
* முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதித் தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ‘நெக்ஸ்ட்'(National Exit Test- NExT) தேர்வு நடத்த, தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ மாணவர்களுக்கான ‘நெக்ஸ்ட்’ தேர்வு இந்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெக்ஸ்ட் தேர்வில் தேர்வு பெற்றால்தான் பயிற்சி மருத்துவர் பணியை செய்ய முடியும் என்றும் இரு தேர்வுகளாக மே மற்றும் நவம்பர் மாதங்களில் தேர்வுகள் நடக்கும் எனவும் வரும் ஜூலை 28 ஆம் தேதி நாடு முழுவதும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர்கள், ‘நெக்ஸ்ட் 1’ தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே, பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற முடியும். அதேபோல ‘நெக்ஸ்ட் 2’ தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான், முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர முடியும். வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கும், இந்த தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கல்வியில் நீட் தேர்வு மூலம் மாநில உரிமையைப் பறித்ததுபோல், தற்போது ‘நெக்ஸ்ட்’ (NExT) என்ற தேர்வு மூலமும், அனைத்து இடங்களுக்குமான ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை மூலமும் மாநில உரிமையைப் பறிப்பதற்கான முயற்சிகளை ஒன்றிய பா.ஜ.க அரசு தொடங்கியுள்ளது கண்டனத்துக்கு உரியதாகும்.தற்போது நெக்ஸ்ட் தேர்வை அறிமுகப்படுத்துவது என்பது கிராமப்புற மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், பள்ளிக்கல்வி அடிப்படையில் நடத்தப்படும் தேர்வு முறை, மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தும். மருத்துவ படிப்புகளுக்கான காலத்தை அதிகரிக்கச் செய்து மருத்துவ மாணவர்களை மன உளைச்சலுக்குத் தள்ளும் நெக்ஸ்ட், மருத்துவ தகுதித் தேர்வு நடத்தும் முடிவை தேசிய மருத்துவ ஆணையம் கைவிட வேண்டும் என்று கழக நிர்வாகக் குழு வலியுறுத்துகிறது.
* கடந்த 2018 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21ஆவது சட்ட ஆணையம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம் இல்லை. தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கதும் அல்ல என்று தெரிவித்தது. 185 பக்கங்கள் கொண்ட அந்த ஆலோசனை அறிக்கையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் நாட்டில் நிலவும் பன்முகத்தன்மைக்கு மதச்சார்பின்மை முரண்பட முடியாது. நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை என்பதை பொது சிவில் சட்டம் மூலம் சமரசம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அது தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஆகிவிடும் என்று தெரிவித்திருந்தது. இருப்பினும் திருமணம், விவாகரத்து தொடர்பான சட்டங்கள் சிலவற்றை பொதுவானதாக பல்வேறு மதங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், 22ஆவது சட்ட ஆணையம் ஜூன்-14 ,2023 அன்று வெளியிட்ட அறிவிப்பில், பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்துகள் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் பொது சிவில் சட்டம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி ஜூன்-27 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் பாஜக வாக்குச்சாவடி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார். “ஒரே குடும்பத்துக்கு இரண்டு வெவ்வேறு விதமான சட்டத்திட்டங்கள் எப்படிப் பொருந்தும். அதேபோல் ஒரு தேசம் இரண்டுவிதமான சட்டங்களைக் கொண்டு இயங்க முடியாது” என்று பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தி பேசி உள்ளார். உச்சநீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த கூறியுள்ள நிலையில், பொது சிவில் சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மோடி. நாட்டின் பன்முகத் தன்மையை சீர்குலைத்து வரும் ஒன்றிய பாஜக அரசு, பொது சிவில் சட்டத்தை செயற்படுத்த துடிப்பது கடும் கண்டனத்திற்கு உரியது ஆகும். இந்த முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
* சென்னை தலைமைச் செயலகத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மாவட்ட நிலை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, “டாஸ்மாக் பாட்டில்களால் பல பிரச்சினைகள் உள்ளன. கண்ட இடங்களிலும் அவை வீசப்பட்டு விடுகின்றன. எனவே மது பாட்டிலுக்கு பதிலாக ‘டெட்ரா பாக்கெட்’ வரவேண்டும் என்று பல தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். குறுகிய இடத்தில் அவற்றை வைக்கலாம். அவற்றை கையாள்வது எளிது. அதோடு உடைந்து நஷ்டம் ஏற்படுவது இருக்காது. எனவே அதனடிப்படையில் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. டெட்ரா பேக் மூலம் விற்பனை செய்து, அதை மறு சுழற்சியாக மீண்டும் பயன்படுத்தலாம். அதுபோல கடை திறக்கும் காலநேரம் பற்றி ஆய்வு செய்தபோது, காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை கட்டிட வேலை போன்ற கடுமையான உடலுழைப்பு வேலைக்கு செல்பவர்கள் மது கிடைக்காமல் சிரமம் அடைகிறார்கள் என்று கண்டறிந்தோம். அவர்களுக்காக என்ன ஏற்பாட்டை செய்யலாம்? என்பதில் இன்னும் முடிவெடுக்கவில்லை.” என்று தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப் படுத்த படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கோரி வரும் நிலையில், நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும் மதுக்கடைகளை முன்கூட்டியே திறக்க முயல்வது ஏற்கத்தக்கது அல்ல. அம்முயற்சியை கைவிட வேண்டும் என்று இக்கூட்டம் வலியிறுத்துகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.