‘மாவீரன்’ மாற்றங்களை செய்த பின்னரே ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனலில் வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்றம்

இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில், மாவீரன் படத்தின் காட்சிகளில் இடம்பெறும் கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனலில் வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் 60 கோடி ரூபாய் செலவில், உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அவரது மனுவில், படத்தில் வில்லனாக நடித்துள்ள மிஸ்கின் வரக்கூடிய காட்சிகளில் அவர் சார்ந்துள்ள கட்சியின் கொடியாக, தங்களது கட்சியின் கட்சியின் கொடி பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அந்த காட்சிகளை நீக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வெங்கடேசன் ஆஜராகி, “சிகப்பு – வெள்ளை – சிகப்பு என்ற வண்ண அடுக்குகளில் உள்ள தங்கள் கட்சியின் கொடியை படத்தில் பயன்படுத்தி உள்ளனர். கொடியாக மட்டுமல்லாமல் படத்தில் வரக்கூடிய கட்சியினர் அணியும் வேட்டி மற்றும் துண்டிலும் கட்சியின் கொடி பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் வரும் எதிர்மறையான கதாப்பத்திரத்துக்கு கட்சியின் கொடி பயன்படுத்தப்படுவதால், கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதுடன், அது பொதுமக்கள் மத்தியில் தவறான பிம்பத்தை விதைப்பதாக அமைந்துவிடும். எனவே, அந்த வண்ணங்களை மாற்ற உத்தரவிட வேண்டும். அந்த மாற்றத்தைச் செய்யாமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

அப்போது சாந்தி டாக்கீஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன், “படத்தில் இடம்பெறுவது இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை போன்றது இல்லை. இளம் காக்கி – மஞ்சள் – இளம் காக்கி என்கிற அடுக்கில்தான் படத்தில் வரும் காட்சிகளில் கொடி வடிவமைக்கப்பட்டு உள்ளது. படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையானவை என படத்தின் தொடக்கத்தில் பொறுப்புத் துறப்பு வெளியிடப்படும். மனுதாரர் கூறுவதைப்போல், காட்சிகளை முழுமையாக மாற்ற 10 முதல் 20 நாட்கள் கால அவகாசம் தேவைப்படும். இந்த திரைப்படம் வெள்ளிக்கிழமை 750க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஒருவேளை படம் வெளியாகாவிட்டால், பெருத்த நஷ்டம் ஏற்படும்” என்று வாதிட்டார்.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட்டு,”படத்தின் முன்னோட்ட காட்சிகள் குறித்த வீடிவோவை பார்க்கும்படி நீதிபதி மஞ்சுளாவிடம் வழங்கினார். அதை பார்த்த நீதிபதி மஞ்சுளா பிறப்பித்த உத்தரவில், எந்த அரசியல் கட்சியையும் குறிப்படவில்லை என படத்தின் தொடக்கத்தில் 15 விநாடிகள், இடைவேளைக்கு பிறகு 15 விநாடிகள், படம் முடியும் போது 10 விநாடிகள் என 40 வினாடிகளுக்கு பொறுப்புத் துறப்பை (Disclaimer) வெளியிட வேண்டும் என படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

அதேசமயம், இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில் காட்சிகளில் இடம்பெறும் கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனலில் வெளியிட வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.