விஜய் சேதுபதியின் 50வது படத்தின் பெயரை மகாராஜா என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டில் ‘ஜவான்’ படத்தில் நடித்துள்ளார். அட்லீ இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோனே, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப்படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி அமோகமான வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் பாலிவுட்டில் கதிரீனா கைப்புடன் இணைந்து ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்திலும் நடித்து முடிந்துள்ளார்.
விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்களை அண்மைக்காலங்களாக தோல்வியை தழுவி வருகின்றன. அதே நேரத்தில் அவர் வில்லனாக, குணச்சித்திர கதாபத்திரங்களில் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான ‘விடுதலை’ படத்தில் வாத்தியாராக நடித்து மிரட்டியிருந்தார். இந்தப்படத்தில் அவரின் நடிப்பு பாராட்டுக்களை அள்ளியது. இதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி. மேலும் தற்போது அவர் ஹீரோவாக நடித்து வரும் படத்தை ஆறுமுக குமார் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றோம்’ படத்தை இயக்கியவர். இவர் தற்போது விஜய் சேதுபதி ஹீரோவாக வைத்து இயக்கி வரும் படத்தின் ஷுட்டிங் மலேசியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் 50 வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிதிலன் ஸ்வாமிநாதன் இந்தப்படத்தை இயக்கவுள்ளார். இவர் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் வெளியாகி விமர்சனரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற ‘குரங்கு பொம்மை’ என்ற படத்தை இயக்கியவர். இந்நிலையில் இவர் தற்போது விஜய் சேதுபதியை இயக்கும் படத்திற்கு ‘மகாராஜா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ‘மகாராஜா’ படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் ராஜாவாக விஜய் சேதுபதியும், ஓநாயாக அனுராக் காஷ்யப்பும் மோதி கொள்வதை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.