பெண் பத்திரிகையாளர் கையை உடைக்க முயன்ற பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் சிங்!

பாலியல் சீண்டல் புகாருக்குள்ளான பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சிங், ஒரு பெண் நிருபரின் கையை உடைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட் இந்திய மல்யுத்த சங்கத் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் மீது போலீஸார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரின் கையை அவர் உடைக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மல்யுத்த சங்கத் தலைவராக இருக்கும் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பாலியல் புகார் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக புகார் அளித்தும் போலீஸாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் நூற்றுக்கணக்கான மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் போராட்டம் நடத்தினர். சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக சாலையில் அமர்ந்து அவர்கள் போராட்டம் நடத்திய போதிலும், அவர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிமடுக்கவில்லை. மாறாக, போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

பின்னர், மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக ஏன் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என டெல்லி போலீஸாருக்கு கேள்வியெழுப்பினர். இதையடுத்து, போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், பிரிஜ் பூஷன் சிங்கை விசாரிப்பதற்கும், தண்டிப்பதற்கும் முகாந்திரம் இருப்பதாக கூறப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு ஆங்கில தொலைக்காட்சி பெண் நிருபர், பிரிஜ் பூஷன் சிங்கிடம் பல கேள்விகளை கேட்டார். அதற்கு அலட்சியமாக பதில் சொல்லிக் கொண்டு வந்த பிரிஜ் பூஷன் சிங், தனது காரில் ஏறி அமர்ந்தார். அப்போது அந்த பெண் நிருபர் மைக்கை நீட்டியபடி இருந்தார். அப்போது திடீரென அவர் கதவை ஓங்கி அடைத்தார். இதில் நூலிழையில் நிருபரின் கை தப்பியது. ஆனால், மைக் சிக்கிக்கொண்டது. அப்போது பிரிஜ் பூஷன் சிங், மீண்டும் இரண்டு முறை கார் கதவை வைத்து அந்த மைக்கை இடித்தார். இதில் அந்த மைக் கீழே விழவே, அங்கிருந்து அவர் சென்றார்.

இதனிடையே, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரிஜ் பூஷன் சிங்கின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.