அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளை கொன்று நாட்டின் வளர்ச்சியை தடுக்க மோடி அரசு தீவிரமாக இருப்பததாக காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.
2023ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அறிவியல் ஆராய்ச்சிக்கான நிதி 6.87% குறைந்துள்ளது. இந்தியாவின் உயர்மட்ட ஆராய்ச்சி நிறுவனங்களின் விஞ்ஞானிகளுக்கு இந்த நிதியாண்டுக்கான நிதியை மத்திய அரசு இன்னமும் வழங்கவில்லை என்று தகவல் வெளியாகியது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பதாவது:-
நாட்டில் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளை கொன்று நாட்டின் வளர்ச்சியை தடுக்க மோடி அரசு தீவிரமாக இருக்கிறது. தாங்கள் கடினமாக சம்பாதித்து கிடைத்த சேமிப்பை கொண்டு ஆராய்ச்சியைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் உயர்மட்ட ஆராய்ச்சி நிறுவனங்களின் விஞ்ஞானிகள் உள்ளனர். தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை அமைப்பதன் மூலம் அதிக நிதியுதவி வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால் ஆராய்ச்சிகளுக்கான கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. திட்ட ஊழியர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. தனியார் நிதி வரவேற்கத்தக்கதுதான்; ஆனால் அரசு நிதி நிறுத்தப்படக்கூடாது. 2023ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அறிவியல் ஆராய்ச்சிக்கான நிதி 6.87% குறைந்துள்ளது. 2017ல் விஞ்ஞான சமூகம், ஆராய்ச்சிகளுக்கு அளிக்கப்படும் குறைந்த நிதி, நிதி வெட்டுக்கள் மற்றும் போலி அறிவியல் சித்தாந்தங்கள் குறித்த தங்கள் கவலைகளை பதிவு செய்ய நாட்டின் 27 நகரங்களில் நாடு தழுவிய போராட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
2015ல் மோடி அரசாங்கம் விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை ‘சுய நிதி’ திட்டங்களைத் தொடங்குமாறு கேட்டுக்கொண்டது. அதாவது அவர்கள் ஆராய்ச்சிக்காக அவர்களே தங்கள் சொந்த நிதியை திரட்ட வேண்டும் என்று பொருள். விஞ்ஞான மனோபாவத்தை ஊக்குவிப்பதற்கு எதிராக மோடி அரசு மீண்டும் மீண்டும் தனது முழு அலட்சியத்தையும் அவமதிப்பையும் வெளிப்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி, ஜெய் விக்யான் மற்றும் ஜெய் அனுசந்தன் (அறிவியல் வெல்க, ஆராய்ச்சி வெல்க) போன்ற கோஷங்களை எழுப்புகிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவரது அரசாங்கம் “பரஜய் விக்யான், பரஜய் அனுசந்தன்” (அறிவியலை தோற்கடி, ஆராய்ச்சியை தோற்கடி) என்ற சித்தாந்தத்தை கடைபிடிக்கிறது. இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசை தாக்கி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
மூத்த விஞ்ஞானி எஸ்.சி.லகோட்டியா தனது ஊழியர்களுக்கு தனது சொந்த பாக்கெட்டிலிருந்து ஊதியம் வழங்குவதாக கூறியுள்ளார். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையும், உயிரி தொழில்நுட்ப துறையும் இவ்விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்? ‘குறைந்தபட்ச நிதி, அதிகபட்ச ஆராய்ச்சி’ என்று இந்த வாரம் மோடி அரசாங்கம் ஒரு புதிய முழக்கத்தை உருவாக்கும். இவ்வாறு சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.