தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர். பாலு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாகத் தமிழ்நாடு அரசையும் திமுகவையும் விமர்சித்தே வருகிறார். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை திமுகவினர் சொத்து பட்டியல் என்று கூறி ஒன்றை வெளியிட்டார். அதில் திமுகவின் முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. அப்போதே அவர் இது திமுகவினரின் சொத்து பட்டியல் என்றும் ஊழல் பட்டியல் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், இதுவரை தமிழ்நாட்டை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்றும் கூறியிருந்தார். இது அதிமுக- பாஜக கூட்டணி இடையே ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தியது என்றால் மறுபுறம் இது திமுகவினர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திமுக மீதான குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ரூ.500 கோடி இழப்பீடு வழங்காவிட்டால் சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதைத் தொடர்ந்து திமுகவில் இருந்து மேலும் சிலரும் நோட்டீஸ் அனுப்பினர்.
அந்த வகையில் திமுக மக்களவை குழு தலைவரான டி.ஆர்.பாலுவும் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், அண்ணாமலை இது தொடர்பாக டுவீட் செய்துள்ளார். திமுகவினர் சொத்துக் குவிப்பு குறித்த உண்மைகளும் நீதிமன்றம் மூலம் மக்களுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அண்ணாமலை மேலும் தனது டுவிட்டரில், “திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு சொத்துக் குவிப்பு பற்றிய தகவல்களை, தமிழ்நாடு பாஜக சார்பாக திமுக பைல்ஸ்-இல் வெளியிட்டதைத் தொடர்ந்து, அவர் என் மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நாளை (இன்று) நேரில் ஆஜராக உள்ளேன். ஊழல் எனும் கரையான், இத்தனை ஆண்டுக் காலம் நமது நாட்டை எப்படி அரித்திருக்கிறது என்றும், அதனை அரசியலிலிருந்து முழுமையாக அப்புறப்படுத்த வேண்டியது எத்தனை முக்கியம் என்பதையும் பொதுமக்கள் அனைவரும் அறிவார்கள். நமது மாண்புமிகு நீதித் துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. திமுகவினர் சொத்துக் குவிப்பு பற்றிய அனைத்து உண்மைகளும் மாண்புமிகு நீதிமன்றம் வாயிலாக மக்களுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த திமுகவுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.