எங்களை நோக்கி முன்வைக்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்வோம். நாங்கள் எந்த அமைச்சரையும் போல நள்ளிரவில் நெஞ்சு வலி என்று கூறி மருத்துவமனையில் சேர மாட்டோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி, திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து குற்றச்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்றும் அண்ணாமலை தரப்பில் பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு 8 வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது
இதற்கிடையே திமுக எம்.பியும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு, அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது நீதிமன்றத்தில் கடந்த மே 12ஆம் தேதி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 1957-ம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வரும் தான் எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளதாகவும்ம், தனக்கு சமுதாயத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் நற்பெயரும் மரியாதையும் உள்ளது. அதை சீர்குலைக்கும் விதமாக, களங்கம் ஏற்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
பொய்யான குற்றச்சாட்டை கூறி தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அண்ணாமலை எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். இதுதவிர அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார் டி.ஆர்.பாலு. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், ஜூலை 14-ம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் ஆஜராக அண்ணாமலைக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார் அண்ணாமலை. அண்ணாமலை ஆஜராவதை ஒட்டி நீதிமன்ற வளாகத்தில் பெரும் கூட்டம் சேர்ந்தது. இன்று விசாரணையில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வழக்கின் நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெறும் என்றும், அன்று மீண்டும் ஆஜராகுமாறு அண்ணாமலைக்கு உத்தரவிடப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “ஊழலுக்கு எதிரான பாஜகவின் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்றுள்ளது. எங்கள் போராட்டம் தொடர்ந்து நடக்கும். ஆகஸ்ட் 24ஆம் தேதி மறுபடியும் இங்கு ஆஜராவோம். டிஆர் பாலுவின் குடும்பத்தினரையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் எனக் கோருவோம். டிஆர் பாலு உட்பட அனைவரும் கூண்டில் ஏற வேண்டும். எங்களை நோக்கி முன்வைக்கப்படும் எல்லா கேள்விகளுக்கு பதில் சொல்வோம். நாங்கள் எந்த அமைச்சரையும் போல நள்ளிரவில் நெஞ்சு வலி என்று கூறி மருத்துவமனையில் சேர மாட்டோம். எல்லா நாளும் நான் இங்கு இருப்பேன். தமிழ்நாட்டில் முதல் தலைமுறைக்கும் மூன்றாம் தலைமுறைக்கும் யுத்தம் நடைபெறுகிறது. அவர்களிடம் பண பலம், அதிகார பலம் இருக்கிறது. எங்களிடம் ஒன்றும் இல்லை, மக்கள் சக்தி மட்டும் தான் துணை. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்” என அண்ணாமலை தெரிவித்தார்.
டி.ஆர்.பாலு மீது நாங்கள் முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் 2014ஆம் ஆண்டு மு.க.அழகிரி மதுரையில் தெரிவித்திருக்கிறார். டி.ஆர்.பாலு எவ்வாறு ஊழல் செய்தார் எத்தனை கப்பல் வைத்துள்ளார் அதன் மூலம் எவ்வளவு சம்பாதித்துள்ளார் எல்லாம் தெரியும் என்று அழகிரி கூறினார். அவர்மீது டி.ஆர்.பாலு எந்த வழக்கும் தொடரவில்லை. டி.ஆர்.பாலு மட்டுமல்ல, அவரது குடும்ப உறுப்பினர்களும் சொத்து குவித்திருக்கிறார்கள்.
திமுக ஃபைல்ஸ் பார்ட் 1 வெளியிட்டதால் திமுகவினர் பலர் என் மீது கடும் கோபத்தில் உள்ளனர். முதல்வர் உட்பட திமுகவின் பல்வேறு நிர்வாகிகள் ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளனர். அதில் இன்று டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன்.
பினாமி பெயரில் சொத்துகளை வாங்கியிருக்கக்கூடிய பட்டியலில் இருப்பவர்கள் சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். இந்த ஆதாரங்களை சிபிஐயிடம் வழங்கலாம் என்றால் தமிழ்நாட்டுக்குள் தங்கள் அனுமதியின்றி சிபிஐ வரக்கூடாது என்று தமிழ்நாடு அரசு சட்டம் பிறப்பித்துள்ளது. சிபிஐக்கு கொடுத்திருக்கக்கூடிய அந்தஸ்தை மாநில அரசு எடுத்துவிட்டது. இதனால் நாம் தப்பித்து விடலாம் என முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார். DMK Files இரண்டாம் பாகம் குறித்த ஆவணங்களை ஆளுநரிடம் சீல் வைக்கப்பட்ட கவரில் வழங்கலாமா அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அவர்களிடம் கொடுப்பதா அல்லது பொதுவெளியில் கொடுப்பதா என்று விரைவில் அறிவிப்பேன். DMK Files Part 2-வில் அதிமுகவில் இருந்து சென்ற திமுக அமைச்சர்கள் தான் அதிகம். பாதயாத்திரையின்போது dmk files பாகம்3, பாகம் 4 என அடுத்தடுத்து வெளியிடப்படும். என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.