ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இன்று மதியம் 2.35 மணிக்கு சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது. சந்திரயான் 3 வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து பிரிக்கப்பட்டதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பூமியில் இருந்து நிலவு சுமார் 3.84 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது. பூமிக்கு மிக அருகில் உள்ள இந்த கோளில் அரிய வகை கனிம வளங்கள் இருப்பதாக விண்வெளி ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதையடுத்து அங்கு மனிதர்களை வாழ வைக்க முடியுமா என்பது தொடர்பான ஆராய்ச்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிரபஞ்சத்தில் நீண்ட தொலைவில் உள்ள மற்ற கிரகங்களை ஆய்வு செய்ய மிக எளிதாக நிலவில் இருந்து விண்கலங்களை அனுப்ப முடியும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். எனவே நிலவில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. நிலவில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே தங்களது விண்கலன்களை இறக்கி ஆய்வு பணிகளை செய்து உள்ளன. இந்தியாவும் 4-வது நாடாக அந்த வரிசையில் இடம் பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங் கின. முதல் சந்திரயான் விண்கலம் செலுத்தப்பட்டபோது அது நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. அதற்கான படங்கள் ஆதாரத்தையும் உலக நாடுகளுக்கு வழங்கி சந்திரயான் பிரமிக்க வைத்தது. நிலவில் மிக எளிதான பகுதிகளில்தான் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஆய்வு நடத்தி வருகின்றன. நிலவின் தென் துருவத்தில்தான் அதிக கனிம வளங்களும், நீர்ச்சத்துக்களும் உள்ளன. எனவே அங்கு முதல் கட்ட ஆராய்ச்சியை முதல் நாடாக தொடங்கும் நடவடிக்கைகளில் இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த 2019 ஜூலை 22-ந் தேதி விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு, சந்திரயான்-2 விண்கலம் 2019 செப்டம்பரில் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் கலன் தரையிறங்காமல், நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.-3 (ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

ராக்கெட் ஏவுதலுக்கான 25.30 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை சந்திரயான்-3 விண்கலத்தில் திரவ எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்தன. சில மணி நேரங்களில் இந்த பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றது. கிரையோஜெனிக் எந்திரத்தில் அடுக்கடுக்காக திரவ எரிபொருள் நிரப்பப்பட்டது. இதையடுத்து இறுதி கட்ட ஆய்வுகள் நடந்தன. அதில் சந்திரயான்-3ல் உள்ள அனைத்து கருவிகளும் திருப்திகரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதுபோல சந்திரயான் -3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் பாகங்களும் திட்டமிட்டபடி இயங்கி வருவது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து திட்டமிட்டபடி சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது தளத்தில் இருந்து இன்று பிற்பகல் சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்திரயான்-3 விண்கலம் தனது பயணத்தை திட்டமிட்டபடி இன்று தொடங்கியது. சந்திரயான்-3 விண்கலம் ஏவுதலை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் வந்திருந்தனர்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா அனுப்பிய விண்கலன்கள் சக்தி வாய்ந்தவை. எனவே அவை விரைவில் நிலவை சென்று அடைந்தன. ஆனால் சந்திரயான்-3 விண்கலத்தை 10 கட்டங்களாக நிலவுக்கு அருகே கொண்டு செல்ல இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். எனவே சந்திரயான்-3 விண்கலம் நிலவை சென்றடைய 40 நாட்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அதுவரை அதன் பயணத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் பெங்களூர் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்களது கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து கண்காணிப்பார்கள். 40 நாள் பயணத்துக்கு பிறகு ஆகஸ்டு 23-ந் தேதி நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தை தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். அன்று மாலை 5.47 மணிக்கு சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரை இறங்கும் என்று விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர். சந்திரயான்-3 விண்கலத்தின் பயணத்தில் ஏதேனும் மாற்றங்களை விஞ்ஞானிகள் செய்தால் மட்டுமே நிலவில் அது தரை இறங்குவதில் சில மணி நேரம் மாறுபடலாம். எனவே திட்டமிட்டபடி அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர்.

சந்திரயான்-3 விண்கலம் 3,895 கிலோ எடை கொண்டது. ஏற்கெனவே ஆர்பிட்டர், நிலவை சுற்றி வருவதால், இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன. இவை 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும். இந்த திட்டம் வெற்றி அடையும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.3- எம்4 (ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது. சந்திரயான் 3 வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து பிரிக்கப்பட்டதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதையடுத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சந்திரயான்-3 நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளது என்றும், எல்.வி.எம்.3- எம்4 ராக்கெட் சந்திரயான்-3 விண்கலத்தை துல்லியமான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியதாகவும் கூறினார்.

இஸ்ரோவின் கனவுத் திட்டமான சந்திரயான் விண்கலத்தின் திட்ட இயக்குநராக தமிழர்கள் தான் இருந்து வருகின்றனர். முதல் இரண்டு திட்டங்களைப் போலவே சந்திரயான்- 3 திட்ட இயக்குநராகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரே பணிபுரிந்துள்ளார். அவர்தான் விழுப்புரத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வீர முத்துவேல். இவரது தந்தை பழனிவேல் ரெயில்வே ஊழியராக இருந்தவர். இவரும் ரெயில்வே பள்ளியில் படித்து முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். ஆனால், விண்வெளியில் இருந்த ஈடுபாடு காரணமாக தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் படிப்பை முடித்தார். சென்னை ஐ.ஐ.டி.யில் மேற்படிப்பை நிறைவு செய்த வீரமுத்துவேல், அங்கு ஏரோ ஸ்பேஸ் துறையின் முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார். நுணுக்கமான ஹார்டுவேர் பணிகளையும் ஈடுபாட்டுடன் செய்யக்கூடிய ஆர்வம் கொண்ட இவருக்கு, 1989-ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவில் விஞ்ஞானியாகும் வாய்ப்பு அமைந்தது. இஸ்ரோவில் சேர்ந்த பின்பு அவருக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால், இஸ்ரோவில் பணியாற்றுவதையே அவர் விரும்பினார். 2016-ம் ஆண்டில், விண்கலத்தின் எலக்ட்ரானிக் தொகுப்பில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் முறை பற்றிய ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். அந்த கட்டுரை தொடர்பான சோதனை பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் நடைபெற்றது. வீர முத்துவேல் தன் ஆய்வில் கையாண்டிருக்கும் தொழில்நுட்பம் நிலவில் விண்கலத்தின் லேண்டரை தரையிறக்கவும், விண்கலத்தின் ரோவர் பகுதியை இயக்குவதற்கும் உதவக்கூடியது.

30 ஆண்டுகளாக இஸ்ரோவில் பல பொறுப்புகளில், வெவ்வேறு திட்டங்களிலும் பணிபுரிந்த அனுபவம் மிக்க வீர முத்துவேல் கடந்த 2019-ம் வருடம் சந்திரயான்- 3 திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பாராட்டுகளைக் குவித்த அவரது ஆய்வுதான் இதற்கு காரணமாக இருந்தது. சந்திரயான் -2 திட்ட இயக்குனராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வனிதா பணியாற்றினார். அவருக்குப் பின் விஞ்ஞானி வீர முத்துவேல் அந்தப் பொறுப்பை ஏற்றார். இவருக்குக் கீழ் 29 துணை இயக்குநர்களுடன் இன்னும் பல விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் உழைத்து சந்திரயான் -3 விண்கலத்தின் திட்டத்தை உருவாக்கி உள்ளனர். நான்கு ஆண்டுகளில் பல சோதனைகள் மூலம் சந்திரயான் விண்கலம் படிப்படியாக மேம்பட்டுள்ளது. சந்திரயான்- 2 திட்டத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டு சந்திரயான் 3 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கே பெருமை சேர்க்கும் இத்தகைய திட்டத்தில் தமிழர் ஒருவர் முக்கிய பங்காற்றி வருவது ஒவ்வொரு தமிழருக்கும் கிடைத்த பெருமை.

இந்நிலையில், சந்திரயான்- 3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ குழுவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதன் மூலம் இந்தியா புதிய அத்தியாயம் படைத்துள்ளது. சந்திரயான்- 3 வெற்றிகரமாக செலுத்தி இஸ்ரோ வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சந்திரயான் – 3 இந்தியாவின் விண்வெளி ஒடிஸியில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது; ஒவ்வொரு இந்தியனின் கனவுகளையும் லட்சியங்களையும் உயர்த்தி உயரமாக உயர்கிறது. சந்திரயானின் வெற்றி நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். தங்களின் ஆன்மாவிற்கும் புத்தி கூர்மைக்கும் தலை வணங்குகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகளுக்கு அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இந்த நாள் முக்கியமானது. தற்சார்பு இந்தியா திட்டத்தில் சந்திரயான்- 3 உருவாக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திரயான்- 3 மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது; இந்தியாவே பெருமைப்படுகிறது. சந்திரயான்- 3 வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் வாழ்த்துக்கள் என்று ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.