எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்!

எங்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இறுதியில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அவமானப்படுத்தப்பட்டனர். அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. அதைத்தொடர்ந்து நடைபெற்ற சட்டப் போராட்டத்திலும் எடப்பாடி பழனிசாமியே வெற்றி பெற்று, பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தி அதிலும் வெற்றி பெற்று அதிமுகவின் உச்ச பட்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்துள்ளார்.

அதிமுக சார்பில் மதுரையில் பொன்விழா மாநாடு நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 20ஆம் தேதி மாநாடு நடத்துவதற்கான ஏற்பாகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் கட்சியில் சேருவதாக இருந்தால், அத்தகையவர்கள் கட்சியின் பொதுச் செயலாளருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து, மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டவர்களும், கட்சியின் பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கி மீண்டும் கட்சியில் சேருபவர்களும் மட்டுமே கட்சி உறுப்பினர்களாக கருதப்படுவர் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காலந்தொட்டு இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆகவே, கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேருவதாக இருந்தால், மேற்கண்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இன்றைய தினம் காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “எனக்கும், சசிகலாவுக்கும், ஓபிஎஸ்க்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். மன்னிப்பு கடிதம் கொடுக்கும் இடத்தில் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் தான் உள்ளனர். கோடநாடு வழக்கில் மடியில் மனம் இருக்கிறது, அதனால்தான் எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறார் என்றும் தெரிவித்தார்.

சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எனக்கும் துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்பு கேட்க வேண்டும். எங்கள் மூவருக்கும் துரோகம் செய்த பழனிசாமிதான் எங்கள் 3 பேரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். கூட்டணி இல்லை என்றாலும் தனித்துப் போட்டியிடுவோம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நடைபெறும் போராட்டங்களுக்கு எங்களின் ஆதரவும் உண்டு என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.