கறுப்பு பணத்தை பற்றி பேச உதயநிதி, ஸ்டாலின் குடும்பத்திற்கு தகுதியில்லை: அண்ணாமலை

கறுப்பு பணத்தை பற்றிப் பேச அமைச்சர் உதயநிதி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகுதி இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் இது போன்ற ஒரு முதலமைச்சர் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து மக்களுக்கும் நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் காமராஜர். காமராஜர் கண்ட கனவுகளை நாடு முழுவதும் பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார். தமிழக அரசியலில் மீண்டும் நேர்மையான, நியாயமான ஆட்சி வர வேண்டும் என்று சபதம் ஏற்றுள்ளோம். அதை நிறைவேற்றுவோம். காவிரியில் ஏன் தண்ணீர் வரவில்லை என்பதற்காக கர்நாடகாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருக்க வேண்டும். மேகதாது அணை கட்டியே தீருவோம் என காங்கிரஸ் கூறியுள்ளது. அதை பற்றிய தீர்மானத்தை காணவில்லை. தி.மு.க.வின் தீர்மானங்கள் பொய்யும், புரட்டுமாக உள்ளது. மத்திய அரசை குறை சொல்வதாக மட்டுமே உள்ளது. தமிழகத்தின் உரிமை, கண்முன்னே பறிபோய் கொண்டு உள்ளது. அதை பற்றிய தீர்மானத்தை காணோம். இந்த கூட்டத் தொடரில் பா.ஜ.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள, எதிர்க்கட்சிகள் சொல்லும் பொய்களுக்கு விடை அளிப்பார்கள். பொது சிவில் சட்டம் குறித்து பொய் சொல்கின்றனர்.

ஜி.எஸ்.டி. வந்த பிறகு அனைத்து மாநிலங்களும் முன்னேறுகிறது. தமிழகம் மட்டும் முன்னேறாததற்கு ஜி.எஸ்.டி. காரணம் அல்ல. 20 முதல் 30 சதவீத கமிஷன் கேட்டால், தொழில்துறை எப்படி உள்ளே வரும். முதலமைச்சரும், உதயநிதியும் அமைச்சரவையில் ஆங்கிலம், இந்தி பேசுபவர்களை உடன் வைத்து கொள்ள வேண்டும். அப்படி வைத்து கொண்டால், பிரதமர் என்ன பேசினார் என்பது முழுமையாக தெரியும். பிரதமர் சொன்னது அவர்களுக்கு என்ன புரிந்தது? குறிப்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு பிரதமர் கூறியது ஒன்றுமே புரியவில்லை. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு கூட பதில் சொல்லாமல் சிரித்து விட்டு சினிமா ஷூட்டிங் போல செல்கிறார். பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு ஆக்கபூர்வமாக பதில் சொல்ல அவருக்கு அக்கறை இல்லை. திமுக நிதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்திருப்பாதாக சொல்கிறார். அதுவாவது அவருக்கு புரிந்ததா? உதயநிதியும் ஸ்டாலினும் தங்களின் கேபினட்டில் ஆங்கிலம் மற்றும் இந்தி பேசுபவர்கள் ஓரிருவரை வைத்து கொள்ள வேண்டும். அப்போதுதான் பிரதமர் பேசுவது புரியும், பிரதமர் என்ன பேசினார் என்று புரியாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் சொன்னதை நிரூபித்தால் ஒரு கோடி தருகிறேன் என பாஜக தொண்டர்கள் போஸ்டர் ஒட்டுகிறார்கள். பிரதமர் மோடி கூறியதை மொழி பெயர்த்து போட்டுள்ளேன். இவர்கள் பிரதமரோடு துணை நின்று, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை பணி செய்யவிட்டால் செந்தில் பாலாஜி மொரிஷியசில் பதுக்கியிருக்கும் பணத்தை கொண்டு வந்து விடலாம். பிரதமர் கூறிய பணத்தில் செந்தில் பாலாஜியின் மொரிஷியஸ் பணம் இருக்கும். இதில் முதலமைச்சர் முடிவு எடுக்க வேண்டும்.

ராஜகண்ணப்பன் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. அவர்களது அமைச்சரவையில் எத்தனை பேர் வெளியே பணம் பதுக்கி வைத்துள்ளனர். எத்தனை பேர் பதுக்கி வைத்துள்ளனர் என்று வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். பிரதமர் கூறிய கருப்பு பணம் இதுதானே. இந்தியாவில், கருப்பு பணம் வெளியே பதுக்கி வைத்துள்ளவர்களில் தமிழக அரசியல்வாதிகள் தான் அதிகம் பேர் உள்ளனர். வெளிநாட்டில் இருந்து கருப்பு பணத்தை கொண்டு வந்தால் அதில் பாதி தி.மு.க., அமைச்சர்களின் கருப்பு பணம் இருக்கும். இதில் நடவடிக்கை எடுத்தால் நெஞ்சு வலி என சொல்லி மருத்துவமனையில் படுக்க வைத்து கொள்கின்றனர். கருப்பு பணம் குறித்து உதயநிதி மற்றும் மு.க.ஸ்டாலினுக்கு பேச தகுதியில்லை. ஏனெனில் அவர்கள் அதில் சம்பந்தப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் தான் பணவீக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் விவசாய உற்பத்தி குறைந்துள்ளது. தக்காளி விலையை குறைக்க, மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் மானியம் கொடுக்கிறது. மிழக அரசு காய்கறி விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாநிலங்களில் பெய்துவரும் பருவமழையால் காய்கறி உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் வரும் நாட்கள் சவாலனதாக இருக்கும் மாநில அரசு அதற்கு தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.