தமிழகத்தில் ரயில் திட்டப் பணிகளுக்காக 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: அமைச்சர் எல்.முருகன்

தமிழகத்தில் பல்வேறு ரயில் திட்டப் பணிகளுக்காக 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ரயில் நிலையத்தில் 1.24 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட முன்பதிவு அலுவலகத்தை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று திறந்து வைத்தார். இங்கு மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக மூன்று கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தானியங்கி டிக்கெட் விற்பனை சேவை மூலம் டிக்கெட்டுகளை பயணிகள் தாங்களாகவே பதிவு செய்து கொள்ளலாம். இதையடுத்து புகழ்பெற்ற நீலகிரி மலைப்பாதை ரயில் சேவைகளுக்கான பல்வேறு சிறப்பு அம்சங்கள் உடன் கூடிய ரயில் பெட்டிகள் கொண்ட ( ரயில் எண் 06171 ) மேட்டுப்பாளையம் – உதகமண்டலம் வரையிலான சிறப்பு ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:-

யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட நீலகிரி மலை ரயிலின் பெட்டிகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை இன்று தொடங்கி வைத்திருக்கிறோம். இது சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று 18 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கிறது. பிரதமரின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு சுமார் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் குன்னூர் ரயில் நிலையம், ஊட்டி ரயில் நிலையம் ஆகியவற்றுக்கும் தலா 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் ரயில்வே துறை மிக வேகமாக முன்னேறியுள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் தமிழகத்தின் ரயில் திட்டங்களுக்கு 6,000 கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 9 புதிய வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.

கோவை ரயில்வே கோட்டம் தொடர்பான கேள்விக்கு, ஏற்கனவே பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து பிரிந்து சேலம் ரயில்வே கோட்டம் உதயமானது. சேலம் டூ கோவை என்பது பெரிய தூரம் இல்லை. அதேசமயம் கோவைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக எல்.முருகன் குறிப்பிட்டார்.