மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவர் நினைவாக மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் தமிழக அரசால் அமைக்கப்பட்டது. கல்விக் கண் திறந்த காமராசர் பிறந்தநாளில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையையும் அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ்நாடார், அவரது மகள் ரோஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கலைஞர் நூற்றாண்டு நூலகம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு நூலகம் உருவாக்க மொத்தம் ரூ.215 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. இதில் ரூ.60 கோடிக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. ரூ.18 கோடிக்கு தளவாடப் பொருட்கள், புத்தகங்களை அடுக்கி வைக்கத் தேவையான ரேக்குகள் மற்றும் கட்டுமானத்துக்காக ரூ.130 கோடி செலவிடப்பட்டது.
அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், செய்தி – நாளிதழ்கள் சேமிப்பு பகுதி, நூல்கள் கட்டும் பிரிவு ஆகியவை அமைந்துள்ளன. தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டுக் கூடம், ஓய்வு அறை, சொந்த நூல்கள் படிக்கும் பகுதி, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கைப் பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன. நூலகத்தின் முதலாவது தளத்தில் கலைஞர் பகுதி, குழந்தைகள் நூலகம், நாளிதழ்கள் – பருவ இதழ்கள் படிக்கும் பகுதி, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, அறிவியல் கருவிகள் பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன. இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, கலைஞரின் நூல்களைக் கொண்ட பிரிவு எனச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் உள்ளிட்ட பிரிவுகள் அமைந்துள்ளன. நான்காவது தளத்தில், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஏறத்தாழ 30 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஐந்தாவது தளத்தில் மின்னணுத் தொழில்நுட்பத்தின் வாயிலாக அறிவை கடத்தும் வகையில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ஆறாவது தளத்தில் நூல் பட்டியல் தயாரித்தல், நூல் பகுப்பாய்வு மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் சார்ந்த பகுதிகள் அமைந்துள்ளன.
கலைஞர் நூற்றாண்டு நூலக பதிவேட்டில் முதல்வர் ஸ்டாலின், “தலைவர் கலைஞர் அவர்களின் நூறாண்டு நினைவு நூல் நிலையத்தை மதுரை மாநகரில் திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு பெருமைப்படுகிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் அயராது உழைப்போம். வாழ்க கலைஞர்” என்று எழுதி கையெழுதிட்டார்.
விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:-
தலைநகரில், தமிழ்நாட்டில் தலைமகன் அண்ணாவின் நூற்றாண்டில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கருணாநிதி அமைத்து தந்தார். இன்று கலைஞருக்கு அவரது நூற்றாண்டில் கலைநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நான் அமைத்து இருக்கிறேன். புகுமுகு வகுப்பு வரை இலவச கல்வி என்று முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்த பிறகுதான் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் பள்ளியை நோக்கி வந்தார்கள். இதை அறிந்த காமராஜர், எனக்கு மகிழ்ச்சியாக இருக்கு.. இதை கருணாநியிடம் போய் சொல்லுங்க என்று சொல்லி அனுப்பினார். அந்த பெருந்தலைவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது கருணாநிதிதான். அந்த நாளில் தான் இந்த நூலகத்தை இன்றைக்கு நாம் திறந்து வைத்திருக்கிறோம். தொடக்க பள்ளிகள், உயர் பள்ளிகளை அதிகப்படுத்தினார் கருணாநிதி. பாடப்புத்தகங்களை இலவசமாக வழங்கினார். கிராமப்புற மாணவர்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும் சலுகைகளை கொடுத்தார். அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கினார். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார். கணிணி பாடத்தை அறிமுகம் செய்தார். திமுகவின் முதல் ஆட்சி காலத்திலேயே தமிழ்நாட்டில் ஏராளமான அரசு கல்லூரிகள் உருவாக்கப்பட்டது. 1947 முதல் 1967 வரையிலான 20 ஆண்டு காலத்தில் திறக்கப்பட்ட மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை 68 தான். ஆனால், கலைஞர் முதல்வராக இருந்த 1969 முதல் 1975 வரையிலான கால கட்டத்தில் 97 அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டது.
திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என நான் அடிக்கடி சொல்வது கல்வியும், சுகாதாரமும் தான். சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வோம் என்பதற்கு சென்னை மருத்துவமனையும், மதுரை நூலகமும் சான்று. சென்னை தமிழகத்தின் தலைநகர் என்றால், மதுரை தமிழகத்தின் கலை நகர். கண்ணகி எரித்த மதுரையில் அறிவு தீ பரவ போகிறது. திமுக என்பது அரசியல் இயக்கம் மட்டுமல்ல, அறிவு இயக்கமும் ஆகும். கலைஞர் நூலகத்திற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்.
குழந்தைகள், மாணவர்கள், போட்டித் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் நூலகம் அமைந்துள்ளது. அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. மாணவர் பருவத்திலேயே தமிழ் சமூகத்திற்காக போராடியவர் கருணாநிதி. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியே ஒரு நூலகம் தான். தமிழ் இன்றும் தனித்து இயங்க காரணம், மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம். படிப்பு ஒன்றே மாணவர்களுக்கு நோக்கமாக இருக்க வேண்டும். படிப்பு மட்டும் தான் யாராலும் திருட முடியாத ஒரே சொத்து. ஒரு இனத்தின் முன்னேற்றத்திற்கு கல்வி தான் முக்கியம். காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கருணாநிதி. தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்கள் நம்மை பின்பற்றும் வகையில் மகத்தான திட்டங்களை வழங்கி வருகிறோம். இந்தியாவின் முதன்மை மாநில தமிழகத்தை உருவாக்குவதே எங்களின் நோக்கம்.
மதிப்பிற்குரிய திரு ஷிவ் நாடார் அவர்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து இருக்கிறோம். பொது நிகழ்ச்சிகள் எதிலும் அவர் கலந்துகொள்ள மாட்டார். ஆனால் இவரையும் இவரது மகள் ரோஷினி அவர்களையும் மாணவ மாணவிகளான நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அழைத்து வந்து இருக்கிறேன். மிகப்பெரிய தொழில்நிறுவனம் என்று சொல்வது மட்டுமல்ல அவரது பெருமை. இந்திய தொழிலதிபர்களிலேயே அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கக்கூடியவர் என்ற பாராட்டை பெற்று இருப்பவர் அவர். உனக்கு பணம் வரும்போது அதிகபடியான உதவி செய் என்று இவருடைய தாயார் சொன்னாராம். அதற்காகவே அறக்கட்டளை தொடங்கியவர் இவர். 50 நாடுகளில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் வேலை செய்யும் எச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனரான இவரும் உங்களை போலவே அரசு பள்ளிகளில் படித்தவர்தான். பல கிராமங்களை தத்தெடுத்து உதவிகளை செய்துகொண்டு இருக்கிறார். ஒரு கிராமத்திலே பிறந்து மாநகராட்சி பள்ளியிலே படித்து மிகச்சிறிய நிறுவனத்தை சொந்த முயற்சியால் தொடங்கி இன்று இவ்வளவு பெரிய மனிதராக அவர் உயர்ந்து இருக்கிறார். இப்படிப்பட்டவரை உங்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தத்தான் அவர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு இருக்கிறார். அவரது மகள் ரோஷினி அவர்கள் அந்த நிறுவனத்தின் இயக்குநராக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். பெண்கள் அனைத்து பொறுப்புகளிலும் இறங்கி பணியாற்ற வேண்டும் என்ற தந்தை பெரியாரின் கனவு நிறைவேறும் காட்சியினுடைய அடையாளமாகவும் இவர்கள் இருவரும் கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் உங்கள் அனைவரின் சார்பில் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.