தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் அஜித் பவார் அணி திடீர் சந்திப்பு!

மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அதிருப்தி தலைவர்களான துணை முதல்வர் அஜித் பவார், பிரபுல் பட்டேல் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் ஏற்கனவே சிவசேனா கட்சி இரண்டாக பிளவுபடுத்தப்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கோஷ்டியில் பெரும்பான்மை சிவசேனா எம்.எல்.ஏக்கள் இணைந்தனர். இதனையடுத்து உத்தவ் தாக்கரே அரசு கவிழ்க்கப்பட்டு பாஜகவுடன் ஏக்நாத் ஷிண்டே கோஷ்டி இணைந்து புதிய ஆட்சி அமைந்தது. இந்நிலையில் திடீரென சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸும் இரண்டாக பிளவுபடுத்தப்பட்டது. அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கோஷ்டியின் 9 அமைச்சர்கள், பாஜக ஆட்சியில் இணைந்தனர். இதனையடுத்து அதிருப்தியாளர்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையை சரத்பவார் கோஷ்டி மேற்கொண்டது. மேலும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கோஷ்டியின் அமைச்சர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஷிண்டேவின் சிவசேனா கோஷ்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த பரபரப்புகளுக்கு இடையே இன்று திடீரென மும்பையில் சரத்பவாரை அஜித் பவார், பிரபுல் பட்டேல் உள்ளிட்ட அதிருப்தி கோஷ்டி தலைவர்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பிற்கு பிறகு பிரபுல் படேல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சரத் பவாரின் ஆசிர்வாதத்தைப் பெற நாங்கள் அனைவரும் இன்று இங்கு வந்தோம். என்சிபி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பவாரிடம் கோரிக்கை வைத்தோம். இது குறித்து, சரத் பவார் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றார். இந்த புதிய சந்திப்புகள் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.