மதுரை நூலகத்திற்கு தமிழறிஞர்கள் பெயரை வைத்து இருக்கலாம்: ஜெயக்குமார்

மதுரையில் திறந்த நூலகத்திற்கு திருவள்ளுவர் பெயர் வைத்திருக்கலாம். அல்லது எவ்வுளவோ தமிழறிஞர்கள் பெயர் வைத்திருக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரையில் திறந்த நூலகத்திற்கு திருவள்ளுவர் பெயர் வைத்திருக்கலாம். அல்லது எவ்வுளவோ தமிழறிஞர்கள் பெயர் வைத்திருக்கலாம். ஆனால் அதற்கும் அவர் அப்பா பெயரைத் தான் வைத்திருக்கிறார்கள்.

நினைவிடத்திற்கு மெரினாவில் 38 கோடி ஒதுக்கியதுடன் பேனாவிற்கு 81 கோடி ரூபாயை கடலில் கொட்ட வேண்டுமா?. அந்த பணத்தில் சென்னையை மேம்படுத்த எவ்வுளவோ திட்டங்களை செய்யலாம். கருணாநிதி நினைவிடம் வரும்போது அது கடலில் இல்லை, இதனால் சுற்று சூழல் பாதிக்காது, மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காது என்று திமுக வழக்கறிஞர் வில்சன் வாதாடினார். இப்போது கடலில் பேனா வைத்தால் சுற்றுசூழல் பாதிக்காதா?; அன்றைக்கு ஒரு நிலை, இன்றைக்கு ஒரு நிலையா?; உச்சநீதிமன்றத்தில் இதற்கு எதிராக வாதாடி வருகிறோம். பேனா சிலையை உங்கள் சொந்த செலவில் அறிவாலயத்தில் வைத்துக் கொள்ளுங்கள், எங்களுக்கு எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. அரசாங்க செலவில் ஏற்கெனவே கருணாநிதி புகழ் பாட 81 கோடியை கடலில் கொட்ட வேண்டுமா என்பதுதான் எனது கேள்வி.

வடமாநிலங்களில் வெள்ளம், மழை காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வரத்து குறைவு என்பது ஏற்று கொள்ள கூடிய விஷயம்தான். ஆனால் மாநில அரசு விழிப்பாக இருக்க வேண்டும். இந்த சமயத்தில் தனியாக நிதி ஒதுக்கீடு செய்து விலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி மானிய விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும். எங்கள் ஆட்சியில் வெங்காயம் விலை அதிகரித்த போது எகிப்துவில் இருந்து வெங்காயங்களை இறக்குமதி செய்தோம். இதற்கெல்லாம் நிதி ஒதுக்காமல் கண்டதற்கு நிதி ஒதுக்கி அதில் இருந்து ஆதாயம் பெறும் வேளையில் அரசு ஈடுபடுகிறது என்றார்.

ஈபிஎஸ் தரப்புதான் மன்னிப்பு கடிதம் எழுதி தர வேண்டும் என்று டிடிவி தினகரன் சொல்லி உள்ளாரே என்ற கேள்விக்கு, இது வழக்காமான நடைமுறையத்தான் கழக பொதுச்செயலாளர் அறிவிப்பாக வெளியிட்டார்கள். இது குறித்து டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் ஆகியோருக்கு பொருந்துமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோதுதான் அது பொருந்தாது என்று சொன்னேன். ஆனால் பொதுவாக இவர்களை எந்த காலத்திலும் கட்சியில் சேர்த்துக் கொள்வதாகவே இல்லை; தீக்குச்சிக்கு எப்போதுமே தலைக்கணம் அதிகம் அதனால்தான் அது அழியும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.