அமெரிக்காவின் பிரிக்க முடியாத கூட்டாளி நாடு இந்தியா என அந்தநாட்டின் நிதி அமைச்சர் ஜேனட் யெலன் தெரிவித்தார்.
குஜராத்தின் காந்திநகரில் ம் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டம் இன்றும், நாளையும் துவங்குகிறது. இதில் கலந்து கொள்ள அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெலன் இந்தியா வந்துள்ளார். ஜி- 20 நாடுகளின் நிதியமைச்சர்களை சந்தித்து பேசுவதற்கு முன் ஜேனட் யெலன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவுடன் அமெரிக்கா சிறப்பான நல்லுறவைக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் தவிா்க்க முடியாத நட்பு நாடாக இந்தியா திகழ்கிறது. எனது பயணம் அந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்த உதவும். மூலப் பொருள்கள், கருவிகள் உள்ளிட்டவற்றை இந்தியாவில் இருந்து அமெரிக்கா கொள்முதல் செய்து வருகிறது. அதனடிப்படையில் இந்தியாவுடன் அதிமுக்கியத்துவம் வாய்ந்த நல்லுறவை அமெரிக்கா கொண்டுள்ளது.
விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது. இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு நல்லுறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தில் உள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு மேலும் வலுவடையும். அமெரிக்காவைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள் இந்தியாவில் அதிக முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் பொருள்களை உற்பத்தி செய்து அவற்றை அமெரிக்காவுக்கு அந்நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வருகின்றன.
நிதியமைச்சா்களுக்கான ஜி20 கூட்டத்தில், வளா்ந்து வரும் நாடுகளின் கடன் சுமை, உக்ரைனுக்கான ஆதரவு, சா்வதேச வரி ஒப்பந்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. கொரோனா தொற்று பரவல், உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோதப் போா் உள்ளிட்டவற்றால் பல நாடுகள் அதிக அளவிலான கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2015-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. வளா்ந்து வரும் நாடுகள் சந்தித்து வரும் கடன் சுமை பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அந்நாடுகள் வளா்ச்சியடைந்தால், சா்வதேச பொருளாதாரமும் வளா்ச்சி காணும்.
சா்வதேச நிதியத்துக்கு (ஐஎம்எஃப்) தேவையான உதவிகளை அமெரிக்க நிதியமைச்சகம் தொடா்ந்து வழங்கும். ஏழ்மை ஒழிப்பு உள்ளிட்டவற்றில் வளா்ந்து வரும் நாடுகளுக்கு சா்வதேச நிதியம் உதவும். பன்னாட்டு வளா்ச்சி வங்கிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
ரஷ்யாவின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக உக்ரைன் போரிட்டு வருகிறது. உக்ரைனுக்கான உதவிகளை அமெரிக்கா தொடா்ந்து வழங்கும். அமெரிக்காவின் நட்பு நாடுகளும் உக்ரைனுக்குத் தொடா்ந்து ஆதரவை வழங்கும். ரஷ்யாவுக்கு ராணுவ உதவிகள் கிடைப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்படும்.
சா்வதேச பொருளாதாரத்துக்கான சவால்களுக்குத் தீா்வு காண வேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் உள்ளது. அமெரிக்காவும் சீனாவும் ஒருங்கிணைந்து செயல்படவில்லை எனில், சா்வதேச சவால்களுக்குத் தீா்வு காண்பது கடினம். சா்வதேச கடன் பிரச்னை, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஒருங்கிணைந்து தீா்வு காண்பது தொடா்பாக சீனாவுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு பொருள்களின் இறக்குமதிக்காக சீனாவைப் பல நாடுகள் சாா்ந்துள்ளன. அந்நாட்டின் வளா்ச்சி குறைந்தால், பல நாடுகளின் வளா்ச்சியும் தடைபடும். இவ்வாறு அவர் கூறினார்.