பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்தில் பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் விசைத்தறி, கைத்தறி மற்றும் பின்னலாடை உற்பத்தியில் சுமார் 25 முதல் 30 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். திருப்பூரில் உள்ள நிட்டிங், டையிங், பிரிண்டிங், எம்பிராய்டரிங், காம்பேக்டிங், ஸ்டிச்சிங் உள்ளிட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த தொழில்களில் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. ஏற்கெனவே பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, மூலப்பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் இந்த தொழில் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் பருத்தி, நூல் விலையேற்றமும் அவர்களை தொழில் செய்ய முடியாமல் பரிதவிக்க வைக்கின்றன.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பருத்தி, நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழிலில் ஏற்பட்ட பாதிப்பை நீக்க நடவடிக்கை தேவை. இறக்குமதி வரி நீக்கம் உள்ளிட்டவை குறித்து நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். நூற்பாலை துறையில் மீண்டும் வேலைவாய்ப்பை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவிலிருந்து கழிவு பருத்தியை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும். நூற்பாலை சங்கம் உற்பத்தியை நிறுத்தும் அளவுக்கு நூல்களின் விலை உயர்வு கடும் நெருக்கடியை அளித்துள்ளது. அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தில் நூற்பாலைகளுக்கு நிதியுதவியை வழங்க வேண்டும். நூற்பாலை நிறுவனங்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்தும் காலத்தை மேலும் ஓராண்டு நீடிக்க வேண்டும். பருத்தி மீதான 11 சதவீதம் இறக்குமதி வரியை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.