மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க அரசு தயார் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், டெல்லியில் இன்று அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி, “மழைக்கால கூட்டத் தொடரில் விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட மற்றும் சபாநாயகரால் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. குறிப்பாக, எதிர்க்கட்சிகளால் அடிக்கடி எழுப்பப்படும் மணிப்பூர் விவகாரம் குறித்தும் அரசு விவாதிக்கத் தயார். இந்த கூட்டத் தொடரில் 32 மசோதாக்கள் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
முன்னதாக, சபாநாயகர் ஓம் பிர்லா விடுத்த அழைப்பின் பேரில் நடைபெற்ற வணிக ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரகலாத் ஜோசி, அப்போதும், மணிப்பூர் உள்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயார் என்று தெரிவித்துள்ளார்.