தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை, எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுகதான் அந்தக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய இலக்கு. அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை, அதற்கான பணிகளை ஆங்காங்கே தொடங்கியிருக்கிறோம். அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. வேகமாக, துரிதமாக, தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள், 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.
அப்போது மகளிர் உரிமைத் தொகை வழங்கும் நிபந்தனைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அந்தத் திட்டத்தை கிட்டத்தட்ட கடந்த இரண்டு ஆண்டுகளாக புறக்கணித்திருந்தனர். இப்போது தேர்தல் வருகிறது அல்லவா? இந்த மக்களவைத் தேர்தலை மையமாக வைத்துதான், தமிழக முதல்வர் ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை கொடுத்துள்ளார். இதற்கு இன்னும் கணக்கெடுத்தே முடிக்கவில்லை. எப்போது இந்தக் கணக்கெடுப்பு பணி முடியும் என்று யாருக்கும் தெரியவில்லை. அத்தொகையைப் பெற பல நிபந்தனைகளை விதித்துள்ளார். ஆனால், தேர்தல் சமயத்தில் இதுபோன்ற நிபந்தனைகளை எல்லாம் விதிக்கவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றுதான் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு சில தகுதிகளை நிர்ணயித்து, அந்தத் தகுதியின் அடிப்படையில்தான் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
தமிழகத்தில் நடத்தப்படும் அமலாக்கத் துறை சோதனை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தவறு செய்திருக்கிறார்கள், அதனால் அமலாக்கத் துறை சோதனை நடத்துகிறது. அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பொறுத்தவரை, அவர்களுக்கு கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில், ஆங்காங்கே இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகிறது” என்றார்.
அப்போது, பாஜக தமிழகத்தில் 25 இடங்களில் போட்டியிடும் என்று தொடர்ந்து அண்ணாமலை கூறி வருவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “இது எல்லாமே அந்தந்த கட்சியில் உள்ள நிர்வாகிகளை ஊக்கப்படுத்துவதற்காக அந்தந்த கட்சித் தலைவர்கள் கூறுவதுதான். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்தாலும், தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும், எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த காலத்திலும் சரி, எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் இந்த கூட்டணிக்கு தலைமை தாங்கும். அதேபோல், 2019 தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை சந்தித்த போதும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் அதிமுகதான் தலைமை தாங்கியது. 2021 சட்டப் பேரவைத் தேர்தலிலும், அதிமுகதான் தலைமை தாங்கியது. அது தொடரும்” என்று அவர் கூறினார்.
கேள்வி:- அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாகக்த்துறை ரெய்டு நடத்தி உள்ளதே?
பதில்:- ஏற்கெனவே 11 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அமலாக்கத்துறை ஏற்கெனவே வந்து இருக்க வேண்டும் ஆனால் காலதாமதாமாக வந்துள்ளார்கள்.
கேள்வி:- தமிழ்நாட்டில் மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளதே?
பதில்:- அதை சம்பந்தப்பட்ட மந்திரியைத்தான் கேட்கனும், குடிக்கும் பழக்கம் எனக்கு இல்லாததால் அதை பற்றிய விலை எனக்கு தெரியவில்லை. எனக்கும் குடிக்கும் சம்பந்தம் இல்லை. பொறுத்தமில்லாத கேள்வியை பொறுத்தமில்லாதவரிடம் கேட்காதீர்கள் இவ்வாறு அவர் கூறினார்.