‘நான் மோடிக்கும், இ.டி.க்கும் பயப்படமாட்டேன், எப்போது வேண்டுமானாலும் எனது வீட்டுக்கு வாருங்கள்’ என்று பா.ஜ.க.வுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் லா.கூடலூரில் நடைபெற்றது. தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். தி.மு.க., காங்கிரஸ் உள்பட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மாபெரும் வெற்றிக்கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த கூட்டணி வெல்ல வேண்டும் என நீங்கள் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். தி.மு.க.வில் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி என்று ஏராளமான அணிகள் உள்ளன. அதேபோல் அ.தி.மு.க.விலும் பல அணிகள் உள்ளன. ஓ.பி.எஸ். அணி, இ.பி.எஸ். அணி, தீபா அணி, சசிகலா அணி, தீபா டிரைவர் அணி இப்படி பல்வேறு அணிகள் இருக்கின்றன. தி.மு.க.விற்கு மாவட்டத்திற்கு ஒரு கட்சி அலுவலகம் இருக்கும். ஆனால் அ.தி.மு.க.வில் மாவட்டத்திற்கு 3 கட்சி அலுவலகங்கள் இருக்கின்றன, எங்கு செல்ல வேண்டும் என்று யாருக்குமே தெரியாது.
அதேபோல் பா.ஜ.க.வில் பல அணிகள் இருக்கின்றன. சி.பி.ஐ. அணி, இ.டி.(அமலாக்கத்துறை) அணி, ஐ.டி. அணி. இந்த அணிகளை தேர்தல் நேரத்தில் அவர்கள் களமிறக்கி விடுவார்கள். தற்போது அந்த அணிகளை களம்இறக்கி உள்ளனர். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த அணிகள், 95 சதவீதம் எதிர்க்கட்சியினரின் வீட்டில் மட்டுமே சோதனை நடத்தியுள்ளனர். 2014-ல் மோடி அரசு அமைந்த பிறகு 121 அரசியல் கட்சி தலைவர்களை அமலாக்கத்துறை விசாரித்துள்ளது. அதில் 115 பேர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள். மத்திய அரசால் குறிவைக்கப்பட்ட அத்தனை பேருமே எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள்.
தமிழ்நாடு கவர்னர் ரவி ஊழல் ஒழிப்பு பற்றி பேசி வருகிறார். அவ்வாறு பேசி வரும் அவர், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஏன் அனுமதி மறுக்கிறார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், புதுக்கோட்டை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா இவர்கள் மீதெல்லாம் சென்ற அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி அவர்களது வீடுகளில் சோதனை செய்தது. விஜயபாஸ்கர் வீட்டில் இருந்தவர்கள் சுவர் ஏறி குதித்த காட்சிகளை எல்லாம் பார்த்திருப்பீர்கள். அப்படி மிரட்டித்தான் அ.தி.மு.க.வை அவர்களது அடிமையாக்கியது பா.ஜ.க., அதேபோல் தி.மு.க.வையும் தங்களது அடிமையாக்க நினைக்கிறது பா.ஜ.க. மோடி அல்ல, தி.மு.க.வை யாராலும் அடிமைப்படுத்த முடியாது.
நாங்கள் இ.டி.க்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம். உங்களுடைய பம்மாத்து வேலை தி.மு.க.விடம் ஒருபோதும் நடக்காது. சென்ற மாதம் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினார்கள். 2 நாட்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தினார்கள். எங்கும் எதுவும் சிக்கவில்லை. நேற்று கூட பா.ஜ.க. தலைவர் பேட்டி அளிக்கிறார், அடுத்த ரெய்டு உதயநிதி வீட்டில் நடக்கப் போகிறது என்கிறார். வாருங்கள், எனது முகவரி கொடுக்கிறேன். நான் உங்களுக்கும், உங்கள் இ.டி.க்கும் பயப்படுபவன் அல்ல. நான் கலைஞர் பேரன், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மகன். நான் மோடிக்கும், இ.டி.க்கும்(அமலாக்கத்துறைக்கும்) பயப்பட மாட்டேன். மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. நான் சவால் விடுகிறேன், எப்போது வேண்டுமானாலும் வாருங்கள், சொல்லிவிட்டு வாருங்கள். நான் வீட்டிலேயே இருக்கிறேன். தி.மு.க.வின் ஒரு கிளைச் செயலாளரை கூட நீங்கள் பயமுறுத்த முடியாது. இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.