ரணில் விக்கிரமசிங்கே இன்று பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே 2 நாட்கள் பயணமாக நேற்று இந்தியா வருகை தந்தார். டெல்லியில் இன்று பிரதமர் மோடியை ரணில் விக்கிரமசிங்கே சந்தித்து பேசுகிறார்.

இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த உடன், இந்தியாவுக்கு அந்நாட்டு ஜனாதிபதி அல்லது பிரதமர் முதல் பயணம் மேற்கொள்வது இதுவரை இருந்து வரும் நடைமுறை. இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகி அந்நாட்டை விட்டு தப்பி ஓடினர். பின்னர் இலங்கை திரும்பி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளனர். இந்த புரட்சியில் இலங்கை ஜனாதிபதியானார் ரணில் விக்கிரமசிங்கே. இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு ஆண்டாகியும் இந்தியாவுக்கு ரணில் விக்கிரமசிங்கே வருகை தரவில்லை. இந்திய தரப்பில் மத்திய அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் இலங்கை சென்று வந்தனர். அதே நேரத்தில் இந்தியாவும் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கியது. இன்னொரு பக்கம் சீனாவும் இலங்கைக்கு போட்டி போட்டுக் கடன் வழங்கியது.

இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே நேற்று இந்தியா வருகை தந்தார். டெல்லியில் ரணில் விக்கிரமசிங்கேவை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் வரவேற்றார். பின்னர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை ரணில் விக்கிரமசிங்கே சந்தித்து பேசினார். டெல்லியில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோரை ரணில் விக்கிரமசிங்கே சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது இலங்கைக்கான பொருளாதார நிதி உதவி, இருதரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த சந்திப்புகளின் போது மத்திய அரசு தரப்பில், தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனை குறித்து ரணில் விக்கிரமசிங்கேவிடம் வலியுறுத்தப்பட வேண்டும்; தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்கேவின் இந்திய பயணம் உறுதி செய்யப்பட்ட நிலையில் இலங்கையில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் பிரதமர் மோடிக்கான கடிதங்களை ஈழத் தமிழர் தலைவர்கள் வழங்கினர். ஈழத் தமிழர் பிரச்சனைக்கு ஆக்கப்பூர்வமான தீர்வு காண பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; இது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கேவிடம் மோடி வலியுறுத்த வேண்டும் எனவும் தமிழ் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.