மீனவர்களின் பிரச்சனையை மனிதாபிமானத்தின் அடிப்படையில் அணுக வலியுறுத்தினேன்: பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே ஆகியோர் இன்று டெல்லியில் சந்தித்து பேசினர். இந்த வேளையில் தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை தமிழர்களின் நலன்மீது அக்கறை கொண்டு விவாதித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு பயணிகள் படகு சேவையை தொடங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. மக்கள் வீதிகளில் இறங்கி பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஆகியோர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து இலங்கையின் அதிபராக ரணில் விக்கிரம சிங்கே பொறுப்பேற்றார். இவர் இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதற்கிடையே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கைக்கு இந்தியா உதவி செய்தது.

இந்நிலையில் தான் 2 நாள் பயணமாக ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவுக்கு நேற்று வந்தார். டெல்லியில் இன்று ரணில் விக்கிரமே சிங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை அமைந்தது. மேலும் இருநாடுகள் இடையேயான கடல்வழி மற்றும் வான்வெளி போக்குவரத்தை மேம்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் படகு சேவை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சந்திப்பில் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அதன்பிறகு பிரதமர் மோடி மற்றும் ரணில் விக்கிரமே சிங்கே ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த வேளையில் பிரதமர் மோடி கூறியதாவது:-

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்தியா வந்துள்ள அவரை வரவேற்று வாழ்த்து தெரிவிக்கிறேன். இலங்கை மக்கள் கடந்த ஆண்டு பல சவால்களை எதிர்கொண்டனர். இந்த வேளையில் நாம் நெருக்கமான நண்பர் போல் நெருக்கடியான நேரத்தில் இலங்கை மக்களுடன் தோளோடு தோள் கொடுத்தோம். இந்தியா-இலங்கை இடையே விமான போக்குவரத்தை மேம்படுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறை இடையே பயணிகள் படகு சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்தியா-இலங்கை இடையேயான பயணத்தை மேம்படுத்துவதோடு, வர்த்தகத்தையும் வளர்த்து எடுக்கும்.

இந்தியாவின் அண்டை நாடாக உள்ள இலங்கை என்பது நம்முடன் கொள்கை ரீதியாக நெருக்கமாக உள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையின் இருநாடுகளின் பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்தோம். இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு குறித்தும், வளர்ச்சி, வர்த்தகம் பற்றியும் பேசினோம். இதில் இரு நாடுகளும் பின்னிப்பிணைந்துள்ளதை இருவரும் நம்புகிறோம். மேலும் இலங்கையில் யூபிஐ பணப்பரிவர்த்தனையை அறிமுகம் செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதோடு மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் இன்று விவாதித்தோம். இதில் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அணுக வேண்டும் என வலியுறுத்தினேன். அதோடு இலங்கையின் மறுகட்டமைப்பு, சமூக நல்லிணக்கம் பற்றி பேசினோம். மேலும் இலங்கை அரசு தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றி சமத்துவம், நீதி மற்றும் அமைதிக்கான செயல்முறையை முன்னெடுத்துச் செல்லும் என நம்புகிறேன்” என்றார்.

இதன்மூலம் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உடனான பிரச்சனையில் பிரதமர் மோடி தமிழக மீனவர்கள் குறித்தும், இலங்கை தமிழர்கள் பற்றியும் விவாதித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வேளையில் ரணில் விக்கிரமேசிங்கே தெரிவிக்கையில், ‛‛பொருளாதார நெருக்கடியின்போது இலங்கைக்கு உதவிய இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.