மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் வாழை படத்தை பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
ராமிடம் உதவி இயக்குநராக இருநதவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாளையும், கர்ணனையும் முதல் இரண்டு படங்களாக இயக்கினார். இரண்டு படங்களுமே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கினார். கடந்த ஜூன் 29ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது. தனித்தொகுதி எம்.எல்.ஏ ஒருவர் சாதி வெறி பிடித்தவர்களால் எப்படி நடத்தப்படுகிறார் என்பதையும் அதனை சுற்றியும் படத்தை உருவாக்கியிருந்தார். இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்க்காத கதைக்களம் என்பதால் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. பலரும் மாரி செல்வராஜையும், உதயநிதி ஸ்டாலினையும் மனம் திறந்து பாராட்டினர்.
குறிப்பாக படத்தில் வடிவேலுவின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது. இதுவரை பார்க்காத வடிவேலுவை மாமன்னன் என்ற கதாபாத்திரத்தில் காட்டியிருந்தார் மாரி செல்வராஜ். அதற்கேற்றபடி நடிப்பில் தான் ஒரு மாமன்னன் என்பதை நிரூபித்தார். அவரது நடிப்பை பார்த்த பலரும் கண் கலங்கியும், கை தட்டியும் ரசித்தனர். இந்தப் படத்துக்கு பிறகு நிச்சயம் இதுபோன்ற கதைகள்தான் வடிவேலுவுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே விமர்சன ரீதியாக படம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேபோல் வசூல் ரீதியாகவும் மாமன்னன் படம் நல்ல லாபத்தை பார்த்திருக்கிறது. இதுவரை 50 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூலித்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் அதிகம் வசூல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துகொண்டிருந்தபோதே வாழை என்ற படத்தை தொடங்கிவிட்டார். அந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். படமானது முழுக்க முழுக்க சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. அவர் எழுதிய பேய் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதாக தெரிகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் மாமன்னன் படத்தில் உதயநிதியின் நடிப்பை பாராட்டி வந்த விமர்சனத்தை மாரி செல்வராஜ் டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், “நன்றி மாரி செல்வராஜ் சார். வாழை உங்களின் சிறந்த படைப்பு. உங்களது மேஜிக்கை பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்” என டுவீட் செய்திருக்கிறார்.