தமிழ் முகமூடியை போட்டு தமிழக மக்களை ஏமாற்ற முடியாது: மு.க. ஸ்டாலின்!

தமிழ் முகமூடியை போட்டுக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ளவர்களை ஏமாற்றிவிடலாம் என்று சிலர் கருதுவதாக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சென்னையில் நேற்று முத்தமிழ் பேரவை 42 ஆம் ஆண்டு இசை விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினனாகக் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், விருதுகளை வழங்கினார். இதில் இயல் செல்வம் விருது பட்டிமன்ற பேச்சாளர் எஸ். ராஜாவுக்கும், இசை செல்வம் விருது எஸ்.மகதிக்கும் வழங்கப்பட்டது. இது தவிரச் சிறந்து விளங்கிய கலைஞர்கள் பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

ஆண்டுதோறும் கருணாநிதியை அழைத்து இந்த விழாவை நடத்துவதுண்டு. அதை வழக்கமாக, வாடிக்கையாக வைத்திருந்தவர் நம்முடைய இயக்குநர் அமிர்தம். கருணாநிதி மறைவுற்ற பிறகு, ஆண்டுதோறும் என்னை அழைத்து வந்து இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர் இந்த நிகழ்ச்சிக்குத் தேதி கேட்கிறாரோ இல்லையோ நான் வழக்கமாக ஆண்டுதோறும் ஒரு தேதியைத் தருவதென்று முடிவெடுத்து அதைக் குறித்தும் வைத்துக் கொள்வதுண்டு. ஏன் என்றால் அமிர்தம் அவர்களிடத்திலே எப்பொழுதும் ஒரு பயம் உண்டு. நான் பல இடங்களிலே இதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். அப்பாவிடத்திலே கூட அடி வாங்கியது கிடையாது. அவரிடத்திலே அடி வாங்கியிருக்கிறேன். அதை இன்றைக்கும் மறக்க மாட்டேன். அந்த அளவிற்கு என்னைக் கண்டிப்போடு வளர்த்தவர் அமிர்தம். தொடர்ந்து அவர் ஆற்றிவரும் முத்தமிழ்த் தொண்டிலே என்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற உணர்வோடு நானும் தவறாமல் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்வதுண்டு.

எந்த அமைப்பையும் உருவாக்குவது மிகமிக எளிது. ஆனால் அதை முறைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி நடத்துவது என்பதுதான் மிகவும் அரிது. வள்ளுவர் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். “இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்ற குறளுக்கேற்ப முத்தமிழ்ப் பேரவையை உருவாக்கி அதனை நம்முடைய அமிர்தம் கையில் தொலைநோக்குப் பார்வையுடன் கருணாநிதி ஒப்படைத்திருக்கிறார். இசை விழாவுடன் சேர்த்து, ஆண்டுதோறும் விருதுகளை வழங்குவதை முத்தமிழ்ப் பேரவை வழக்கமாக வைத்திருக்கிறது. முத்தமிழ்ப் பேரவையில் விருது பெறாத தலைசிறந்த கலைஞர்களே இல்லை எனும் அளவுக்கு, அவர்களைக் கண்டறிந்து, விருதுகளைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறது. முத்தமிழ்ப் பேரவை விருதைப் பெற்றோம் என்று சொல்வதே பெருமைக்குரியதாக அமைந்துவிட்டது.

அந்த வகையில் இந்த 42-ஆவது ஆண்டு விழாவில், இயல் செல்வம் விருது பெற்றிருக்கக்கூடிய நம்முடைய அன்பிற்கினிய சகோதரர் எஸ்.ராஜா பற்றி நான் சொல்லத் தேவையில்லை. இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் நான் அவருடைய ரசிகன். பட்டிமன்றத்தில் பாரதி பாஸ்கருடன் ராஜா மோதிக் கொள்ளும் காட்சியைப் பார்த்து ரசிப்பதுண்டு. சிரிக்க மட்டுமல்ல. சிந்திக்கவும் தூண்டக்கூடிய பேச்சுக்குச் சொந்தக்காரர் நம்முடைய ராஜா.. எத்தனை பேருக்குப் பின்னர் பேசினாலும் முத்திரை பதிக்கக் கூடிய அளவிற்குப் பேசக்கூடியவர் நம்முடைய ராஜா. இதுதான் முதல் முதலில் நான் பெறும் விருது என்று அவரே சொன்னார். முதன் முதலாக அதுவும் என் கையால் விருது பெறுகிறார் அவர். அதில் எனக்கு ஒரு பெருமை. இயல்செல்வம் விருதை அவர் பெற்றிருப்பது பொருத்தமான ஒன்று.

இந்தத் தருணத்தில், ஒரு வேண்டுகோளை முத்தமிழ் பேரவைக்கு வைக்கலாம் என நினைக்கிறேன். கருணாநிதி நூற்றாண்டு விழா ஆண்டு இது என்பதால் இந்த ஆண்டு முதல் அவரது பெயரால் ஒரு விருதை முத்தமிழ்ப் பேரவை சார்பில் வழங்க வேண்டும் என்று உரிமையுடன் நான் கேட்டுக் கொள்கிறேன். முத்தமிழுக்குச் சிறப்புற தொண்டாற்றுபவர்க்கு அவரது பெயரில் விருதும் தனியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுவாக முதலமைச்சர் கலந்து கொள்ளும் விழாவில் முதலமைச்சரிடம்தான் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் முத்தமிழ்ப் பேரவைச் செயலாளர் இயக்குநர் அமிர்தம் மீதான உரிமையின் காரணமாக நான் கோரிக்கை வைக்கிறேன். அதனை அவர் தட்டாமல் ஏற்றுக் கொள்வார் என்று நான் நம்புகிறேன். இன்றைக்கு அவர் ‘பெயரால் மதுரையில் உலகத்தரத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது என்றால் அவர் பெயரால் சென்னை கிண்டியில் உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது என்றால் -அதன் மூலமாக மக்களே அந்தப் பயனை அடைகிறார்கள். கருணாநிதியை முன்வைத்து மக்கள் சேவையை, கலைத் தொண்டை ஆற்றி வரும் அரசாக இன்றைய தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

இயல், இசை, நாடகத்தைக் காப்பாற்றுவது என்பது தமிழைக் காப்பாற்றுவது. தமிழினத்தைக் காப்பாற்றுவது. ஆனால் இன்று சிலர் தமிழுக்கும், தமிழர்களுக்கும் விரோதமான செயல்களைச் செய்து கொண்டே தமிழ் முகமூடியைப் போட்டுக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ளவர்களை எல்லாம் ஏமாற்றிவிடலாம் என்று கணக்குப் போடுகிறார்கள். ஆனால் அவர்கள் போடுவது எல்லாம் தப்புக் கணக்குதான். அதைப் புரிய வைக்கும் வகையில், தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் தக்க பாடத்தைப் புகட்டுவார்கள். இது போல ஏராளமான இசை விழாக்கள். இலக்கிய விழாக்கள் நடக்கவேண்டும். புதிய புதிய நாடகங்கள் அரங்கேற்றப்பட வேண்டும். ராஜாவைப் போன்ற பேச்சாளர்கள் மகதி, ராஜேஸ் வைத்யாவைப் போன்ற இசைக்கலைஞர்கள் ஏராளமாக உருவாக வேண்டும். அப்படி உருவானால்தான் பல்லாயிரம் ஆண்டு தமிழை, இன்னும் பல்லாயிரம் ஆண்டுக்குக் காப்பாற்ற முடியும். அரசியலில் இருக்கும் நாங்கள் அரசியல் தொண்டு மூலமாகத் தமிழ் வளர்ச்சிக்கு பணியாற்றுவோம். அதே போல கலைத்துறையில் இருக்கும் கலைஞர்கள், உங்கள் துறை மூலமாகத் தமிழ்க் கலை வளர்ச்சிக்கு பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.