நீதிமன்றங்களில் அம்பேத்கரின் உருவப்படங்களை அகற்றும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இதுதொடர்பாக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை இன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், “அனைத்து நீதிமன்றங்களிலும் தேசத்தந்தை மகாத்மா காந்தி, தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் உருவச்சிலைகளே இடம்பெற வேண்டும். இவர்களை தவிர, மற்ற யாருடைய புகைப்படங்களோ, உருவச்சிலைகளோ இடம்பெறக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக, அம்பேத்கரின் புகைப்படங்களை அகற்றுவதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பல அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காட்டமான டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களிலும், நீதிமன்ற வளாகங்களிலும் தேசத்தந்தை மகாத்மா காந்தி, திருவள்ளுவர் ஆகியோரை தவிர வேறு எந்த தலைவரின் சிலைகளும், உருவப் படங்களும் இடம்பெறக்கூடாது என்று அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அதனால், நீதிமன்றங்களில் அம்பேத்கரின் சிலைகளையும், உருவப் படங்களையும் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகங்களில் பல்வேறு அரசியல் தலைவர்களின் சிலைகளை அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அதேபோல, பல இடங்களில் தேசியத் தலைவர்களின் உருவச்சிலைகள் சேதப்படுத்தப்படுகின்றன. இதனால் உருவாகும் சட்டம் – ஒழுங்கு சிக்கல்களை கருத்தில் கொண்டு 2008-ஆம் ஆண்டு முதல் இந்த நிலைப்பாட்டை சென்னை உயர்நீதிமன்றத்தின் முழுமை அமர்வு எடுத்து வந்திருக்கிறது. இந்த முடிவுக்கு பின்னால் இருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் அக்கறையை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், காரணம் எதுவாக இருந்த போதிலும் இதிலிருந்து அண்ணல் அம்பேத்கருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
இந்தியாவில் நீதிமன்றங்கள் செயல்படுவதன் முதன்மை நோக்கமே இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதுதான். அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்கான இடங்களான நீதிமன்றங்களில் அதை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் சிலைகளோ, உருவப் படங்களோ இருப்பது எந்த வகையில் தவறு ஆகும்? எனவே, நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் ஆகியோருடன் அண்ணல் அம்பேத்கரின் சிலைகள், உருவப்படங்களையும் அமைக்க உயர்நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-
சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் ஆகியோரின் உருவச்சிலை அல்லது உருவப்படங்கள் மட்டுமே இடம்பெறலாம். அவர்களை தவிர வேறு யாருடைய சிலைகளோ, புகைப்படங்களோ இடம்பெறக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் விடுதலைக்காக போராடிய மகாத்மா காந்தியடிகள், இந்த தேசத்தை உருவாக்குவதற்கு எப்படி காரணக்கர்த்தாவாக விளங்கினாரோ, அதே போல புதிய இந்தியாவை கட்டமைப்பதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தை அல்லும் பகலும் உழைத்து வகுத்தளித்தவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் என்ற முறையில் நீதிமன்றங்களில் அவரது திருவுருவப்படம் இருப்பது என்பது மிகவும் பொருத்தமானது ஆகும்.
இதுபோன்ற சூழலில், அம்பேத்கரின் புகைப்படங்களையும், சிலைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் உயர் நீதிமன்றம் இத்தகைய சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி.துறை மாநிலத் தலைவர் ரஞ்சன்குமார் கூறியதாவது:-
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் உருவப்படங்கள் மட்டுமே வைக்க வேண்டும்.. மற்ற தலைவர்களின் படங்கள் நீக்க வேண்டும் என அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்னை, உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும் சென்னை ஆலந்தூரில் கட்டப்பட்டுள்ள புதிய நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டமேதை அம்பேத்கர் படத்தை நீக்க அறிவுறுத்தியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
இந்திய நாடு விடுதலை பெற்றபோது நமது அரசமைப்புச் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை மூலமாக வடிவமைக்க வேண்டும் என்று முடிவு செய்த போது அப்பொறுப்பை திறம்பட செய்வதற்கு தகுதியானவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தான் என்று முடிவெடுத்து, அரசமைப்புச் சட்ட வரைவுக்குழு தலைவராக காந்தியடிகள், பண்டித ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டார். இப்பணியை அவர் செய்வதன் மூலமே அன்றைய இந்தியாவில் நிலவிய ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்து அனைவரது உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க முடியும் என்று உறுதியாக நம்பினார்கள். அனைவரும் போற்றி, பாராட்டத்தக்க வகையில் அரசியலமைப்பு சட்ட உருவாக்கப்பணிகளை மொத்தம் 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்களில் செய்து முடித்தவர் டாக்டர் அம்பேத்கர். அப்பணியை மிகவும் கவனமாக, தனது பொன்னான நேரம் முழுவதும் செலவிட்டு, மேற்பார்வையிட்டு 395 பிரிவுகளும், 22 பாகங்களும், 8 அட்டவணைகளும், 80 ஆயிரம் வார்த்தைகளும் கொண்ட அரிய ஆவணமாக நமது அரசமைப்பு சட்டம் உருவானதற்கு அன்றைய அரசியல் நிர்ணய சபையில் பெரும்பான்மையாக இருந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பண்டித நேரு போன்ற தலைவர்களின் ஒத்துழைப்போடு டாக்டர் அம்பேத்கரின் பேருழைப்பு பின்பலமாக இருந்தது என்பதை எவரும் மறுக்க இயலாது.
இன்றைய இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் அனைத்து மக்களின் உரிமைகளையும் சட்ட ரீதியாக பாதுகாக்கிற கவசமாக திகழ்ந்து வருகிறது. அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நிகழ்கிற போது நீதித்துறையின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது. ஒரு குடிமகனுக்கு ஏற்படுகிற அனைத்து அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பது அரசமைப்பு சட்டமே. அந்த அரசமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களின்படி தான் நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித்துறை இயங்குகிறது. 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு நாள் என்று அறிவிக்கப்பட்ட அன்று தான் அரசமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. இன்றைக்கு இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும், மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான ஆவணமாக விளங்குகிற அரசமைப்பு சட்டத்தின் வரைவுக்குழு தலைவராக இருந்து, அதைதயாரித்து அளித்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் படத்தை நீதிமன்றங்களில் வைக்கக்கூடாது, அப்படி வைத்தால் அகற்றப்படும் அன்று கூறுவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தயாரித்து அளித்த அரசமைப்பு சட்டத்தின்படி தான் நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீர்ப்புகள் எழுதுகிறார்கள். அத்தகைய நீதிமன்றங்களில் சட்ட மேதை டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்களின் படத்தை வைப்பதுதான் நீதிமன்றங்களுக்கு பெருமை சேர்க்கும் செயலாகும். அதற்கு மாறாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படத்தை அகற்ற வேண்டும் என்று கூறுவது நீதிமன்றங்களுக்கு பெருமை சேர்க்காது. எனவே டாக்டர் அம்பேத்கர் படத்தை வைக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற பதிவாளரின் சுற்றறிக்கையை உடனடியாக திரும்பபெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பாக கனத்த இதயத்தோடு வலியுறுத்துகிறேன். தமிழகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களின் சமூக நீதி காவலராக உள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் இப்பிரச்சனையில் தலையிட்டு நீதிமன்றங்களில் மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்தை வைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.