கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பரிந்துரையின் பேரில் சீனாவை சேர்ந்த 263 பேருக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை முதல் மாலை வரை சோதனை நடத்தினர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் உட்பட மூன்று இடங்களில் சோதனை நடைபெற்றது. இதேபோன்று டெல்லியில் லோதி எஸ்டேட்டில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். கர்நாடகாவில் மூன்று இடங்கள் மற்றும் மும்பை, பஞ்சாப், ஒடிசாவில் தலா ஒரு இடம் என மொத்தம் 10 இடங்களில் சோதனை நடைபெற்றது.

கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றுள்ள நிலையில், அவரது இல்லத்திலும் சோதனை நடைபெற்றுள்ளது. கார்த்தி சிதம்பரத்தை 2 வது குற்றவாளியாக சேர்த்து சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. முதல் குற்றவாளியாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில், சீனர்கள் 263 பேருக்கு முறைகேடாக விசா வழங்க கார்த்தி ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ கூறியுள்ளது. மின்னஞ்சல் பரிமாற்றம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே முதல் குற்றவாளியான பாஸ்கர ராமனை சிபிஐ போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.