மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சம்மதம் தெரிவித்த நிலையிலும், பிரதமர் மோடி அது குறித்து பேச வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்ட நிலையில், 2 வது முறையாக மக்களவை மாநிலங்களவையில் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த வாரம் வியாழன் அன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர், வார விடுமுறை முடிந்து இன்று மீண்டும் கூடியது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் முன்னிலையில் பேச வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மக்களவை உள்ளேயும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் மணிப்பூர் விவகாரம் தொடர்ந்து தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களை சமாதானப்படுத்த முயன்றும் அமளி குறையவில்லை. அப்போது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுந்து பேசினார். மக்களவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக லோக் சபாவில் விவாதிக்க அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
ஆனாலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியை நிறுத்தவில்லை. அவர்களின் கோரிக்கை வேறாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இது பற்றி பேச வேண்டும் என்பதே எதிர்கட்சிகளின் எதிர்பார்ப்பு. இதனை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவையில் முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து மக்களவை முதலில் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியதும் மீண்டும் எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். இதனால் 2 மணி வரை மீண்டும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மறுபக்கம் மாநிலங்களவையில் அவைத் தலைவரும், குடியரசு துணை தலைவருமான ஜெகதீப் தன்கர் அவை நடவடிக்கைகள் குறித்து அறிவித்துக்கொண்டு இருந்தார். அப்போது மணிப்பூர் விவகாரம் தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்பிக்கள் தொடர்ந்து சத்தமாக முழக்கங்களை எழுப்பிக்கொண்டே இருந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீன் தன்கர் டெரிக் ஓ பிரையனை கண்டித்தார். “இருக்கையில் அமருங்கள். நாற்காலிக்கே நீங்கள் சவால் விடுகிறீர்கள்.” என்று டெரிக் ஓ பிரையனிடம் அவர் தெரிவித்தார். அடுத்த சில நிமிடங்களில் மாநிலங்களவையை 12 மணி வரை ஒத்தி வைப்பதாக அவர் அறிவித்தார். 12 மணிக்கு மாநிலங்களவை மீண்டும் கூடிய பிறகும் எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களையும் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சஞ்சய் சிங் அவையின் மையப்பகுதிக்கு வந்து மணிப்பூர் விவாகரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அவைத் தலைவர் பியூஷ் கோயல் ஆம் ஆத்மி உறுப்பினரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவைத் தலைவர் தன்கர் மீதமிருக்கும் கூட்டத் தொடர் நாட்களில் இருந்து ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங்கை இடைநீக்கம் செய்தார். இதனைத் தொடர்ந்து அமளி காரணமாக அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.