தேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜூலை 24) காலை சென்னை – கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-
விஜயகாந்த் சிறப்பாக உள்ளார். நல்ல முறையில் உள்ளார். இந்த நேரலையைக் கூட அவர் பார்த்துக்கொண்டு இருப்பார். தேமுதிகவில் உட்கட்சித் தேர்தல் நிறைவுபெற்றுள்ளது. மாவட்டம் வாரியாக பொதுக் கூட்டம், போராட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மாநாடு நடத்தவுள்ளோம். தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். தற்போது வரை, தேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை. யாருடனும் கூட்டணியில் இல்லாததால், டெல்லி என்டிஏ கூட்டத்துக்கு தேமுதிக அழைக்கப்படவில்லை.
மக்களவைத் தேர்தலின்போது தேமுதிகவின் நிலையை அறிவிப்போம். அதிமுக மற்றும் திமுகவில் எம்.பி.யாக இருந்தவர்கள் தமிழகத்துக்கு இதுவரை என்ன செய்துள்ளார்கள். வெறும் எம்.பி.யாக டெல்லி சென்று வருகிறார்கள். தமிழகத்துக்கு தேவையான உரிமைகளை இரண்டு கட்சிகளும் இதுவரை பெற்றுத் தரவில்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் அரசாக ஓர் அரசு இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் கூட்டணியில் பெயர் மட்டுமே மாறியுள்ளது. மக்களின் நிலை மாறவில்லை. ‘இண்டியா’ கூட்டணியில் இருக்கும் தலைவர்களுக்குள் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பிரேமலதாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. விஜயின் அரசியல் பற்றி கேள்வி கேட்டதும் கோபமாக பதில் அளித்த பிரேமலதா, 40 ஆண்டுகாலம் பலருக்கும் முன் உதாரணமாக தனது வாழ்க்கையை வாழ்ந்து வருபவர் விஜயகாந்த். இனி யார் நினைத்தாலும் அவரை போல வர முடியாது; அவரைப்போல மற்றவர்கள் அரசியலுக்கு வர நினைத்தால், அது மோசமான விளைவுகளைதான் ஏற்படுத்தும்.
தேமுதிக லோக்சபா தேர்தலுக்காக தயாராகி வருகிறது. தே.மு.தி.க எந்த கூட்டணியிலும் இல்லை, யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம், என்று கூறி உள்ளார். விஜய் அரசியலுக்கு வர நினைத்தால் அது விளைவுகளை உண்டாக்கும் என்று கூறி உள்ளார்.