சத்யேந்தர் ஜெயினுக்கு மேலும் 5 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு!

டெல்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு, மருத்துவ காரணங்களுக்காக ஐந்து வார இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு மே மாதம் பணமோசடி வழக்கு தொடா்பாக அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் திகாா் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை காரணமாக ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி அவர் தற்போது இடைக்கால ஜாமீனில் உள்ளார்.

தொடர்ந்து சத்யேந்தா் ஜெயினுக்கு இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை(ஜூலை 21) முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக அவருக்கு இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரிய வழக்கில் நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் பீலா எம் திரிவேதி அடங்கிய அமர்வு அவருக்கான இடைக்கால ஜாமீனை நீடித்து இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.