விடுதலை போராட்ட வீரரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கக்கனின் வாழ்க்கை வரலாறு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
சுதந்திர போராட்ட தியாகி, நேரு பிரதமராக இருந்தபோது எம்.பி., காமராஜர் அமைச்சரவையில் அமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்தவரும் அரசியலில் எளிமைக்கு அடையாளமாக வாழ்ந்தவருமான கக்கன் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகி உள்ளது. இந்த படத்தை கோவை சங்கர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து உள்ளது. ஜோசப் பேபி கக்கனாக நடித்துள்ளார். இந்த படத்தில் பாடல்கள் மற்றும் டிரைலர் காட்சி வெளியீட்டு விழா தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது. விழாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலை வகித்தார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பாடல் ஒலிநாடா மற்றும் டிரைலர் காட்சிகளை வெளியிட்டார். முதல் பிரதியை கக்கனின் மகள் கஸ்தூரி பாய், பேத்தியும் சேலம் சரக காவல் துறை துணைத்தலைவருமான ராஜேஸ்வரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இசையமைப்பாளர் தேவா, கக்கன் வேடத்தில் நடிக்கும் ஜோசப் பேபி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.
வாழ்க்கை வரலாறு என்பதால் ஆவணமாக படம் உருவாகியிருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான கக்கனின் போராட்டம், அரசியல் வாழ்க்கை என விரியும் ட்ரெய்லரில் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தது, அவரது எளிமை என பல்வேறு விஷயங்கள் வந்து செல்கின்றன. ‘மனுசனுக்கு மனுசன் என்னப்பா தீட்டு குடிக்கிற தண்ணீயில’ என சாதிக்கு எதிரான வசனம், ‘ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்க்கும் ஒரு ஆளாக எங்க ஊர் காரர் வந்திருக்கிறார்’ போன்ற கக்கனின் பெருமையை உணர்த்தும் வசனங்கள், வறுமையிலும் நேர்மையாக இருக்கும் கக்கன் பதவி துஷ்பிரயோகம் குறித்து பேசும் இடங்கள் கவனம் பெறுகின்றன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது. கக்கன் பிறந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டியிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.