விடுதலை-பாகம் 2: விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர்!

வெற்றிமாறனின் ‘விடுதலை பாகம் 2’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்திலும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தபடத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் சூரி, விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தவிர, பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலரும் பிரதான கதாபாத்திரங்களை ஏற்றியிருந்தனர். ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரட் குமார் படத்தை தயாரித்திருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த ‘விடுதலை பாகம் 1’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது ‘விடுதலை பாகம் 2’-க்கான படப்பிடிப்பில் வெற்றிமாறன் கவனம் செலுத்தி வருகிறார். இதில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, அவர் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.