சந்திரயான் -3 விண்கலம், புவி வட்டத்தின் 5- வது சுற்றுப் பாதைக்கு உயர்த்தப்பட்டது!

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் -3 விண்கலம், புவி வட்டத்தின் 5- வது சுற்றுப் பாதைக்கு உயர்த்தப்பட்டது.

நிலவின் தென் துருவத்துக்கு மிக அருகில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்து, எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.

அதைத் தொடா்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதையை உயா்த்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு ஐந்தாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது புவியின் 5 ஆவது சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வருகிற ஆகஸ்ட் 1-இல் புவிவட்டப் பாதையில் இருந்து விலகி விண்கலம் நிலவின் வட்டப் பாதைக்குள் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.