மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு மறைக்க எதுவும் இல்லை. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்க தயார் என்று நாடாளுமன்றத்தில் அமித்ஷா கூறினார்.
நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியவுடன், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பினர். சிலர் கோஷமிட்டனர். அதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா, கோஷம் எழுப்பக்கூடாது என்று கண்டித்தார். கேள்வி நேரத்தை நடத்த விடுமாறு கேட்டுக்கொண்டார். கேள்வி நேரத்தை தொடங்கினார். அப்போது, பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்துக்கு சென்ற பா.ஜனதா எம்.பி.க்கள் வந்து சேராததால், அவர்கள் குறைவாகவே இருந்தனர். அதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். பெயர் கொடுத்திருந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் துணைக்கேள்வி எழுப்ப மறுத்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, தொடங்கிய 3 நிமிடத்திலேயே சபை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு சபை கூடியபோது, மீண்டும் அமளி நடந்தது. அமளிக்கிடையே, பல்லுயிர் பெருக்க திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி மத்திய மந்திரி பூபேந்தர் யாதவால் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. கடந்த ஆண்டு, கூட்டுக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. மசோதாவை நிறைவேற்ற ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில், நேற்று இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து, மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்யக்கோரி, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அதனால் சபை மாலை 5 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது, கூட்டுறவு துறையையும் கவனிக்கும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பன்மாநில கூட்டுறவு சங்க திருத்த மசோதாவை அமளிக்கிடையே தாக்கல் செய்தார். கூட்டுறவு சங்கங்களில் வெளிப்படைத்தன்மையை உண்டாக்கி, அவற்றை பலப்படுத்துவதும், கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்துவதும் இதன் நோக்கம் ஆகும். மசோதா மீது சிறிது நேரம் விவாதம் நடந்தது. 3 எம்.பி.க்கள் மட்டும் பங்கேற்றனர். விவாதத்துக்கு அமித்ஷா பதில் அளித்தார். அப்போது, அவர் மணிப்பூர் பற்றிய எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளித்தார். அமித்ஷா கூறியதாவது:-
முந்தைய ஆட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட கூட்டுறவு துறையில், கூட்டுறவு சங்க திருத்த மசோதாவில் உள்ள உட்பிரிவுகள், புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும். இங்கே கூச்சல் போடும் எதிர்க்கட்சிகளுக்கு கூட்டுறவு (கோ ஆபரேட்டிவ்) மீதும் அக்கறை இல்லை. ஒத்துழைப்பு (கோ ஆபரேஷன்) மீதும் அக்கறை இல்லை. நான் மீண்டும் சொல்கிறேன். இரு அவைகளின் எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன். மணிப்பூர் சம்பவம் குறித்து, அவர்கள் எவ்வளவு நீண்ட நேரம் விரும்பினாலும், விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்று கூறியுள்ளேன். மத்திய அரசு எதை நினைத்தும் பயப்படவில்லை. மறைப்பதற்கு எதுவும் இல்லை. விவாதிக்க விரும்புபவர்கள், விவாதத்தை தொடங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, கூட்டுறவு சங்க திருத்த மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடந்தது. அதில் மசோதா நிறைவேறியது. அத்துடன், சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை கூடியவுடன், மணிப்பூர் வன்முறை குறித்து இதர அலுவல்களை ஒத்திவைத்து விட்டு, விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அதற்கு பா.ஜனதா உறுப்பினர்கள், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி குறுகிய கால விவாதம் நடத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். அவை முன்னவர் பியுஷ் கோயல், குறுகிய கால விவாதத்துக்கு சம்மதிக்குமாறு சபைத்தலைவர் ஜெகதீப் தன்கரை கேட்டுக்கொண்டார். அவரும் சம்மதித்தார். ஆனால், விரிவான விவாதம் நடத்துமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். விரிவான விவாதத்துக்கான நோட்டீசை ஏற்றுக்கொள்ளுமாறு சபைத்தலைவரை காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார். இருதரப்பு கோஷங்களுக்கிடையே சபை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
12 மணிக்கு சபை கூடியபோது, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-
மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க 50-க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளோம். ஆனால் மத்திய அரசு விவாதம் நடத்த தயாராக இல்லை. இவ்வாறு அவர் பேசியபோது, மத்திய மந்திரி பியுஷ் கோயல் குறுக்கிட்டார். அவர் கூறுகையில், ”விவாதிக்க அரசு தயாராக உள்ளது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளிப்பார். ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் நடக்கும் பாலியல் வன்முறை பற்றியும் விவாதிப்போம்” என்றார். அதற்கு கார்கே ஆட்சேபனை தெரிவித்தார். பிரதமர் மோடி, சபைக்கு வந்து பேச வேண்டும் என்று வலியுறுத்தினார். அவருக்கும், பியுஷ் கோயலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அதைத்தொடர்ந்து, பிற்பல் 2 மணிவரை சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, நாடாளுமன்ற முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பதற்காக சபாநாயகர் ஓம்பிர்லா, அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில், கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் பங்கேற்றனர். மணிப்பூர் பற்றி பிரதமர் சபைக்கு வந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். ஆனால், மத்திய அரசோ, அமித்ஷா பதில் அளிப்பார் என்று கூறியது. இருதரப்பும் தங்கள் நிலையில் உறுதியாக இருந்ததால், இதில் தீர்வு ஏற்படவில்லை.
இதற்கிடையே, மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி, இன்று (புதன்கிழமை) மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ் அளிக்கும் என்று தெரிகிறது. இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. மணிப்பூர் வன்முறை குறித்து விரிவான விவாதம் நடத்தவும், பிரதமர் அறிக்கை தாக்கல் செய்யவும் கட்டாயப்படுத்தும்வகையில் இந்த யோசனை தெரிவிக்கப்பட்டது. பல்வேறு வழிமுறைகளை ஆராய்ந்ததில், மத்திய அரசை பணிய வைக்க இதுதான் உறுதியான வழி என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எனவே, இந்தியா கூட்டணி, இன்று காலை 10 மணிக்கு முன்பு, நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கும் என்று தெரிகிறது. மூத்த தலைவர் ஒருவர் இதை உறுதி செய்தார். நோட்டீசில் 50 எம்.பி.க்களிடம் கையெழுத்து வாங்கும் பணி நடந்தது. எம்.பி.க்கள் பலம் நோட்டீஸ் கொடுத்த பிறகு, சபாநாயகர் சபையில் நோட்டீசை வாசிப்பார். அதன்பிறகு, 10 நாட்களுக்குள் விவாதம் நடக்கும். தேதியை சபாநாயகரே முடிவு செய்வார். விவாதத்தின் முடிவில் ஓட்டெடுப்பு நடைபெறும். மத்திய அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், ராஜினாமா செய்ய வேண்டி இருக்கும். 543 எம்.பி.க்களை கொண்ட மக்களவையில், 5 இடங்கள் காலியாக உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 330-க்கு மேற்பட்ட உறுப்பினர்களும், இந்தியா கூட்டணிக்கு 140-க்கு மேற்பட்ட உறுப்பினர்களும் உள்ளனர். எந்த அணியையும் சேராத 60-க்கு மேற்பட்ட உறுப்பினர்களும் இருக்கின்றனர்.