டெல்லியில் அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அது பின்னாளில் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதை தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்து தீர்ப்பு அளித்தது. இதன்படி டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளது.எனவே ஜனநாயக நாட்டில் துணைநிலை ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. டெல்லி அரசுக்கு பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் உள்ளன. குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் டெல்லி அரசுக்கே உள்ளது என்று தீர்ப்பு அளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை ரத்தும் செய்யும் வகையில் புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர மத்திய அரசு உடனடியாக முடிவு செய்தது. இதற்காக கடந்த மே 19ம் தேதி அன்றே மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. டெல்லி அரசின் முடிவோடு வேறுபடுவதற்கும், மறுபரிசீலனைக்காக கோப்புகளைத் திருப்பி அனுப்புவதற்கும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரத்தை உறுதிப்படுத்துவது தான் புதிய அவசர சட்டத்தின் நோக்கமாக இருந்தது. இதன்படி துணை நிலை ஆளுநரின் அனுமதி இல்லாமல் அதிகாரிகளை மாற்றும் விஷயத்தில் முடிவுகளை அரசால் எடுக்க முடியாது. அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாறுதல் விவகாரத்தில் அவருக்கே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது.
இது ஒருபுறம் எனில் டெல்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார், லட்சத்தீவு, டாமன் மற்றும் டையூ மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி (டானிக்ஸ்) கேடரில் உள்ள குரூப்-ஏ அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கும் தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைக்க இந்த அவசரச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டெல்லி மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசுக்கு உள்ள அதிகாரிகளை கட்டுப்டுத்தும் உரிமையை பறிக்கும் சட்டத்தை உருவாக்குவதன் மூலம், “அரசியலமைப்புச் சட்டக் கொள்கைகளை” நாடாளுமன்றம் ரத்து செய்ய முடியுமா என்பதை அரசியலமைப்பு பெஞ்ச் ஆராயும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று செவ்வாய்கிழமை ஒப்புதல் வழங்கியது. இதற்கான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்த மசோதாவை எப்போது தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இந்த மசோதாவை ஆம் ஆத்மி கடுமையாக எதிர்த்து வருகிறது. காங்கிரஸ் கட்சியும் இந்த மசோதாவை எதிர்ப்பதாக அறிவித்துள்ளது. எதிர்க்கட்சிகள் பல டெல்லி அவசர சட்டத்தை எதிர்க்கும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த மசோதா லோக்சபாவில் வென்றாலும், ராஜ்யசபாவில் வெல்ல கடுமையான சவால் இருக்கும் என்று கூறப்படுகிறது.