அண்ணாமலை தொடங்கும் பாதயாத்திரையில் பங்கேற்க வருமாறு தேமுதிகவிற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 10மாதங்கள் மட்டுமே இருப்பதால் அரசியல் அரங்கில் கூட்டணி கூட்டல் கழித்தல் ஆரம்பமாகி விட்டது. எதிர்கட்சிகள் இந்தியா கூட்டணி அமைத்தால் அதை வீழ்த்த சக்கரவியூகம் வகுகிறது ஆளும் பாஜக. மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற பல வியூகங்களை வகுக்க ஆரம்பித்து விட்டது. என்னதான் எதிர்கட்சியினர் வலிமையான கூட்டணி அமைத்தாலும் அந்த கூட்டணிக்கு தலைமை யார்? பிரதமர் வேட்பாளர் யார் என்று இன்னமும் முடிவு செய்யவில்லை. ஆளும் பாஜகவிற்கு கூட்டணி வலிமையாக இல்லாவிட்டாலும் சுய பலத்தை நம்பி உள்ளது. மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று நேரடியாக அறிவிக்காவிட்டாலும் மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார் என்று சொல்லி வருகின்றனர். சின்னச் சின்ன கட்சிகளை எல்லாம் இணைத்து டெல்லியில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது பாஜக. சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் தேசிய ஜனநாயகக் கட்சியின் கூட்டம் நடைபெற்றது அதில் அதிமுகவிற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தேமுதிக, ஓ.பன்னீர் செல்வம் போன்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் நாங்கள் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று கூறி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். தேமுதிகவின் பிரேமலதாவோ எந்த கூட்டணியிலும் நாங்கள் இல்லை என்று பகிரங்கமாகவே அறிவித்து விட்டார்.
இந்த சூழ்நிலையில்தான் நாளை மறுநாள் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை தொடங்க உள்ளது. இதற்கான தொடக்க விழா ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது. அமித்ஷா பங்கேற்று பேசும் இந்த விழாவில் பங்கேற்க அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்தான் இன்றைய தினம் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார் பாஜக துணைத்தலைவர் கருநாகராஜன். ராமேஸ்வரத்தில் தொடங்கப்போகும் அண்ணாமலையின் பாதயாத்திரையில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க தேமுதிகவிற்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. அந்த கோபத்தில்தான் நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை என்று கூறினார் பிரேமலதா விஜயகாந்த். தேமுதிக தற்போது வரை யாருடனும் கூட்டணியில் இல்லை. லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, கட்சித் தலைவர் விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் என்றும் பிரேமலதா கூறியிருந்தார். முதல்வர் ஸ்டாலினுடன் நான் தொலைபேசியில் பேசியதாக சிலவதந்திகள் பரவுகின்றன. மறைமுகமாக கூட்டணி குறித்து பேசும் பழக்கம் தேமுதிகவுக்கு கிடையாது என்றும் தெரிவித்திருந்தார் பிரேமலதா.
கடந்த லோக்சபா தேர்தலின் போது தேசிய ஜனநாயகக்கூட்டணியில் தேமுதிக இணைந்து போட்டியிட்டது. 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக உடன் இணைந்து போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்தது. இந்த சூழ்நிலையில்தான் எந்த கூட்டணியிலும் இல்லை என்று பகிரங்கமாகவே அறிவித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த். இதற்கிடையே திடீர் திருப்புமுனையாக அண்ணாமலை தொடங்கும் பாதயாத்திரை பயண கூட்டத்தில் பங்கேற்க தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் செல்வாரா பிரேமலதா? தேசிய ஜனநாயக் கூட்டணியில் மீண்டும் தேமுதிக இடம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.