அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பலாஜியின் நீதிமன்ற காவல் 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, உறவினர்கள் வீடு உள்ளிட்ட அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி சோதனையிட்டனர். அன்று நள்ளிரவே அவர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைதும் செய்யப்பட்டார். அப்போது நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, தனது கணவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக கைது செய்து உள்ளதாகவும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு ஒன்றை மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஐகோர்ட்டில் நீதிபதிகள் நிஷா பானு, பாரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வந்தது. நீதிபதிகள் இருவருமே இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். நீதிபதி நிஷா பானு அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் என்றும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார். அதே நேரம் அதற்கு முற்றிலும் மாறுபட்ட தீர்ப்பை நீதிபதி பரத சக்கரவர்த்தி வழங்கினார். இதையடுத்து 3வது நீதிபதி சிவி கார்த்திகேயன் விசாரித்து, பரத சக்கரவர்த்தி தீர்ப்புடன் தான் உடன்படுவதாக தெரிவித்தார். அமலாக்கத்துறை காவலை முடிவு செய்ய நேற்று நடந்த விசாரணையின்போது, நீதிபதி நிஷா பானு, உச்ச நீதிமன்றமே இனி முடிவெடுக்கட்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.

முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. பின்னர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த செந்தில் பாலாஜி சிகிச்சை முடிந்த பிறகு ஜூலை 17 ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், செந்தில் பாலாஜி மீதான நீதிமன்றக் காவல் வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், புழல் சிறையில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக இன்று ஆஜர்படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி. இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 8 வரை நீட்டித்துள்ளது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். 3வது முறையாக செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.