பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்ற மாநிலமே இருக்காது: முதல்வர் ஸ்டாலின்!

2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்ற மாநிலமே இருக்காது என திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்பில் திமுக தேர்தல் பணியை தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் இன்று திருச்சியில் 15 மாவட்டங்களை சேர்ந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 12,600 வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக பாஜகவை விமர்சனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

நம்முடைய தொண்டர் பலத்துக்கும், கட்டமைப்புக்கு நிகராக தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல இந்தியாவில் ஒரு கட்சி இருக்கா? அந்த பலத்தை நாம் சமூக ஊடகங்களில் முழுமையாக காட்ட வேண்டும். யார் ஆட்சிக்கு வரணும் என்பதை விட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான் முக்கியம். புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நம் அணி வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமல்ல. இந்தியா முழுமைக்கும் நம் அணி வெற்றி பெற வேண்டும். ஏனென்றால் இந்தியாவின் கட்டமைப்பை பாஜக சிதைத்துவிட்டது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது. பாஜக ஆட்சி தொடரும் என்றால் இந்தியாவில் மக்களாட்சி, சமூகநீதியை யாராலும் காப்பாற்ற முடியாது. மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் இந்தியாவில் ஜனநாயகமே இருக்காது. ஏன் தமிழ்நாடு என்ற மாநிலமோ, சட்டமன்றமோ, முதல்வரோ, அமைச்சரோ, எம்எல்ஏக்களோ இருக்கமாட்டார்கள். அத்தனையும் காலி செய்து விடுவார்கள். இதுதான் அனைத்து மாநிலங்களுக்கும் நடக்கும்.

டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டி இருக்கிறார்கள். அதில் மொத்தம் 888 இருக்கைகள் உள்ளன. எதற்காக என்றால் நாடாளுமன்றத்தில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப இருக்கை அமைக்க நினைக்கின்றனர். மக்கள்தொகை அடிப்படையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க பார்க்கிறார்கள். குடும்ப கட்டுப்பாட்டு முறையை சரியாக பின்பற்றிய தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும். நாம் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் வடமாநில எம்பிக்களை வைத்து ஆட்சியை பிடித்து கொள்ளலாம் என தப்புக்கணக்கு போடுகிறார்கள். தமிழ்நாட்டின் குரலை இதன்மூலம் தடுக்க பார்க்கிறார்கள். இதனால் இந்த தேர்தலை மிகவும் முக்கியமானது என நான் கூறுகிறேன்

ஊழல்வாதியான எடப்பாடி பழனிச்சாமியை அருகில் வைத்துக்கொண்டே ஊழல் ஒழிப்பு பற்றி பேசுகிறார் பிரதமர் மோடி. மணிப்பூர் பற்றி எரிகிறது அதைப்பற்றி எதுவும் பேசவில்லை. பாஜகவிடம் இருந்து இந்தியாவை காப்பாற்றவே INDIA கூட்டணி அமைத்துள்ளது. நாட்டில் வாழும் பல்வேறு தேசிய இனங்களை சார்ந்தவர்கள், பல்வேறு மொழியை பேசும் மக்கள், பல்வேறு பண்பாட்டு கொண்டவர்களுக்கு எதிரான சிந்தனை கொண்ட கட்சி தான் பாஜக. நாட்டில் ஒற்றை கட்சியாக இருக்க வேண்டும் என நினைக்கும் பாஜக நினைக்கிறது. ஒற்றை கட்சி ஆட்சி அமைந்தால் ஒருவர் கையில் தான் அதிகாரம் இருக்கும். இதனை தடுப்பதற்காக தான் 26 கட்சிகள் கொண்ட கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டி இருக்கிறோம். இந்தியாவை காப்பாற்ற போவது இந்த இந்தியா கூட்டணி தான். இதனை மோடியால் தாங்கி கொள்ள முடியவில்லை. பாஜகவை வீழ்த்த ஒரு வலுவான அணி அமைத்து விட்டார்களே என பேசி வருகிறார்.

இதனை நான் கடந்த ஓராண்டு காலமாக பேசி வருகிறேன். இதனால் தான் என் மீது அவர்களுக்கு கோபம். தான் மத்திய பிரதேசம் போனாலும் திமுகவை திட்டுகிறார்கள். அந்தமான் விமான நிலையம் திறந்து வைத்தாலும் திமுகவை திட்டுகிறார். பிரதமர் என்ன சொல்கிறார். வாரிசுகளுக்கான கட்சி. கேட்டு கேட்டு புளிச்சிப்போச்சு. வேறு ஏதாவது பேச கண்டுபிடித்து சொல்லுங்கள். ஆமாம், இது வாரிசுகளுக்கான கட்சி தான். ஆரியத்தை வீழ்த்த திராவிட வாரிசுகளுக்கான கட்சி இதுதான். பெரியார், அண்ணா, கருணாநிதியின் வாசுகளுக்கான கட்சி. இதனை தைரியமாக, பெருமையாக சொல்ல முடியும். ஆனால் பாஜக யாருடைய வாரிசு? கோட்சேவின் வாரிசு தான் நீங்கள். இதனை தைரியமாக சொல்ல முடியுமா? குஜராத்தில் 2002ல் நடந்ததை நாடு மறக்கல. இன்று மணிப்பூர் அதனை நினைவுப்படுத்தி வருகிறது.

மே மாதம் 3ம் தேதி தொடங்கிய வன்முறையை இன்னும் கட்டுப்படுத்தாமல் மணிப்பூர் பாஜக அரசும், மத்திய பாஜக அரசும் உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மத்திய அரசும், மாநில போலீசாரும் இணைந்து மக்களை தாக்கி கொண்டு வருகின்றனர். இதனை ஸ்டாலின் சொல்லவில்லை. பாஜகவின் சட்டமன்ற உறுப்பினரே சொல்லி இருக்கிறார்.

நமக்கு எதிராக அவதூறு மற்றும் பொய் செய்திகளை பரப்பிட ஒரு கூட்டம் சுற்றி கொண்டு இருக்கிறது. பொய்களுக்கு ஆயுள் மிகக்குறைவு. அவர்கள் பொய்களை மட்டுமே சொல்லி கொண்டிருக்கட்டும். நாம் திரும்ப திரும்ப அரசின் திட்டங்களை பற்றி பேசி கொண்டிருக்கலாம். நம்முடைய அரசின் நலத்திட்டங்கள் பற்றி வாக்காளர்களிடம் எடுத்து கூறுங்கள். இதன்மூலம் எதிரிகள் பரப்பும் அவதூறு எல்லாம் சுக்கு நூறாக நொறுங்கிப்போகும். இன்றைய சமூக ஊடகங்கள் தான் சிறப்பான பரப்புரை களமாக மாறியுள்ளது. வீட்டில் பக்கத்து அறையில் இருந்தே வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்து வருகின்றனர். நாம் அனுப்பும் ஒரு செய்தி ஒரே நிமிடத்தில் உலகத்துக்கே பரவும் வசதி உள்ளது. இதனால் அனைவரும் சமூக வலைதளங்களில் கணக்குகளை தொடங்க வேண்டும். அந்த கணக்குகளில் இருந்து அவதூறுகளுக்கு பதில் அளிக்க வேண்டும். தேவையில்லாத வம்பு, வாக்குவாதங்கள் எதுவும் செய்யாதீர்கள். ஏனென்றால் அதனை திசை திருப்பி விடுவார்கள். தெரிந்தோ, தெரியாமலோ ஆளுநர் நமக்கு பிரசாரம் செய்து வருகிறார். அவரை மாற்ற வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அவரே இருக்கட்டும். ஏனென்றால் தேர்தலில் நமக்கு வாக்கு அதிகரிக்கும். அதேபோல் தேவையற்ற பிரச்சனைகளை கிளப்பி யாரும் கெட்டப்பெயரை வாங்கி கொடுக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.